மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூ.3½ கோடி அபராதம் வசூல்


மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூ.3½ கோடி அபராதம் வசூல்
x
தினத்தந்தி 17 Nov 2022 12:15 AM IST (Updated: 17 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூ.3½ கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

வாகன தணிக்கை

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை போக்குவரத்து துறை சார்பில் வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில், பறக்கும் படை மோட்டார் வாகன ஆய்வாளர் கதிர்வேல், தர்மபுரி மோட்டார் வாகன ஆய்வாளர் தரணீதர், பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி, அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் ஆகியோர் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

இதில் 37 ஆயிரத்து 500 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு, 5 ஆயிரத்து 858 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது. மேலும் காலாண்டு வரி செலுத்தாமல் இயக்குதல் மற்றும் தகுதி சான்று, காப்பு சான்று, புகை சான்று புதுப்பிக்காமல் இயக்குதல் போன்ற விதிமுறை மீறல்களுக்காக 724 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ரூ.3½ கோடி அபராதம்

இதேபோல வாகனங்களில் அதிக நபர்களை ஏற்றி சென்றதற்காக 156 வாகனங்களுக்கும், அதிக பாரம் ஏற்றி சென்றதற்காக 134 வாகனங்களுக்கும், அனுமதிச்சீட்டு இல்லாமல் இயக்கிய 304 வாகனங்களுக்கும், அதிவேகமாக இயக்கப்பட்ட 3 ஆயிரத்து 356 வாகனங்களுக்கும், தகுதி சான்று பெறாமல் இயக்கிய 435 வாகனங்களுக்கும், காப்பு சான்று மற்றும் புகை சான்று இல்லாமல் இயக்கிய 571 வாகனங்களுக்கும், சிவப்பு நிற எச்சரிக்கை விளக்கு இல்லாமல் இயக்கிய 282 வாகனங்களுக்கும் வாகன தணிக்கையின்போது அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த 10 மாதங்களில் அரசுக்கு சாலை வரியாக ரூ.1 கோடியே 83 லட்சத்து 97 ஆயிரத்து 136 மற்றும் இணக்க கட்டணமாக ரூ.84 லட்சத்து 92 ஆயிரத்து 630 என மொத்தம் ரூ.2 கோடியே 68 லட்சத்து 89 ஆயிரத்து 766 தொகை உடனடியாக வசூலிக்கப்பட்டது. மேலும் பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு இணக்க கட்டணமாக ரூ.87 லட்சத்து 99 ஆயிரத்து 24 நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 10 மாதங்களில் மொத்தம் ரூ.3 கோடியே 56 லட்சத்து 88 ஆயிரத்து 790 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை

இது தொடர்பாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரன் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என்பது குறித்து தொடர்ந்து வாகனத்தை தணிக்கை செய்யப்படும். தணிக்கையின் போது அரசுக்கு வரி செலுத்தாமல் இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், அவற்றின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று எச்சரிக்கை விடுத்தார்.


Next Story