நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றாத தாசில்தாருக்கு அபராதம்: கோர்ட்டு உத்தரவை நிறைவேற்ற அதிகாரிகள் பயிற்சி பெறும் நேரம் வந்துவிட்டது - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து
நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றும்படி பிறப்பித்த உத்தரவை பின்பற்றாத தாசில்தாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. உத்தரவுகளை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் நேரம் வந்துவிட்டது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றும்படி பிறப்பித்த உத்தரவை பின்பற்றாத தாசில்தாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. உத்தரவுகளை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் நேரம் வந்துவிட்டது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
அவமதிப்பு வழக்கு
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ராமசுப்பு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அவமதிப்பு மனுவில் கூறியிருந்ததாவது:-
நெல்லை மாவட்டம் மேல அம்பாசமுத்திரம் கிராமத்தில் ஆனந்தகுளம் என்ற குளம் அமைந்துள்ளது. இந்த குளம்தான், அங்குள்ள மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்திற்கான நீர் ஆதாரமாகவும் உள்ளது.இந்த குளத்தை சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளன.
இவற்றை அகற்றக்கோரி கடந்த 2021-ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். அந்த உத்தரவை நிறைவேற்ற அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நெல்லை மாவட்ட கலெக்டர், தாசில்தார் மற்றும் உரிய அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
அதிகாரிகளுக்கு பயிற்சி
இந்த அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அம்பாசமுத்திரம் நகராட்சி கமிஷனர், தாசில்தார் ஆகியோர் கோர்ட்டில் ஆஜரானார்கள்.
பின்னர் நீதிபதிகள், குறிப்பிட்ட காலத்திற்குள் ஆக்கிரமிப்பு அகற்றப்பட வேண்டும் என இந்த கோர்ட்டு உத்தரவிட்டும், அந்த உத்தரவை பின்பற்றாதது ஏன்? என கேள்வி எழுப்பினர். இதில் மட்டுமல்ல. பெரும்பாலான வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகள் கிடப்பில் போடப்படுகின்றன. கோர்ட்டு உத்தரவுகளை பின்பற்றுவது குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டிய காலம் வந்துவிட்டது என்று கருத்து தெரிவித்தனர்.
தாசில்தாருக்கு அபராதம்
மேலும், நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டும், நடைமுறைப்படுத்தாத அம்பாசமுத்திரம் தாசில்தாரின் நடவடிக்கை ஏற்புடையதல்ல. எனவே அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத்தொகையை மதுரை ஐகோர்ட்டு சித்த மருத்துவப்பிரிவுக்கு செலுத்த வேண்டும் என்றும், உத்தரவுகளை முறைப்படி நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.