கடைக்காரர்களுக்கு ரூ.3¼ லட்சம் அபராதம்
தஞ்சை மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த கடைக்காரர்களுக்கு ரூ.3 லட்சத்து 23 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடம் இருந்து 1 டன் பாலித்தீன் பைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
தஞ்சாவூர்;
தஞ்சை மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த கடைக்காரர்களுக்கு ரூ.3 லட்சத்து 23 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடம் இருந்து 1 டன் பாலித்தீன் பைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
தஞ்சை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. மேலும் இதனை பயன்படுத்தக்கூடாது என விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.இதனையும் மீறி கடைகள், வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் பேரில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் அறிவுரையின் பேரில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ரூ.3¼ லட்சம் அபராதம் வசூல்
மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வது கண்டறிந்தால் முதல்முறை குற்றத்துக்கு ரூ.25 ஆயிரம், இரண்டாம் முறைக்கு ரூ.50 ஆயிரம் மூன்றாம் முறைக்கு ரூ.ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆய்வின் போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருக்கும் கடைக்காரர்களுக்கு அபராதமும் விதித்து வருகிறார்கள்.அதன்படி தஞ்சை மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி தலைமையில், துப்புரவு ஆய்வாளர்கள் ஆய்வின்போது வணிக நிறுவனங்கள், சிறு, குறு வியாபாரிகளிடமிருந்து கடந்த 1 -ந் தேதி முதல் இதுவரை ஆயிரம் கிலோவுக்கும் அதிகமாக பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ரூ.3 லட்சத்து 23 ஆயிரத்து 850 அபராதம் வசூலிக்கப்பட்டது. இது தொடர்பாக 114 கடை, வணிக நிறுவனங்களுக்கு பொது சுகாதார சட்டத்தின் கீழ் அறிவிப்பு நோட்டீசும் வழங்கப்பட்டு உள்ளது.
துணிபைகள்
மேலும் நெகிழி பொருட்களுக்கு மாற்றாக துணி பைகள், காகித பைகள், சணல் பைகள், கண்ணாடி குவளைகள், உலோகத்தால் ஆன குவளைகள் போன்றவற்றை பயன்படுத்துமாறும் மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.