விருத்தாசலம் துணை தாசில்தார் உள்பட 7 பேருக்கு அபராதம்


விருத்தாசலம் துணை தாசில்தார் உள்பட 7 பேருக்கு அபராதம்
x

தகவல் அறியும் உரிமை சட்டத்தில், உரிய தகவல் அளிக்காத விருத்தாசலம் துணை தாசில்தார் உள்பட 7 பேருக்கு அபராதம் விதித்துள்ளதாக மாநில தகவல் ஆணையர் தெரிவித்தார்.

கடலூர்

கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொது தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்து 2-வது மேல் முறையீட்டு மனுக்கள் குறித்து மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் விசாரணை நடத்தினார். தொடர்ந்து பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் மத்தியில் மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தீர்வு

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் அளிப்பதை எதிரி போல் பார்க்க கூடாது. தகவல் அறியும் உரிமை சட்டம் 10 ரூபாயில் தகவல் அறியும் உரிமையை பொதுமக்களுக்கு அளிக்கிறது. மனுதாரர்கள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய தகவல்களை தெரிவிக்க வேண்டியது நமது கடமை.

தற்போது தமிழ்நாடு தகவல் ஆணையம் சார்பில் அனைத்து தகவல் ஆணையர்களும் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரிடையாக சென்று விசாரணை நடத்தி வருகிறோம். மனுதாரர்கள், பொது தகவல் அலுவலர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை வருவதற்கு சிரமமாக இருப்பதால், அதை களையும் வகையில் மாவட்டங்களுக்கு நேரிடையாக சென்று மனுக்கள் மீது விசாரணை நடத்தி தீர்வு காணப்படுகிறது. இதனால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக உள்ளது.

7 பேருக்கு அபராதம்

அதன்படி கடலூர் மாவட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 40 வழக்குகளுக்கு 2-வது மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் பட்டா மாற்றம் தொடர்பாக உரிய பதில் அளிக்காத விருத்தாசலம் துணை தாசில்தாருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தகவல்களை அளிக்காத வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை பொது தகவல் அலுவலர்கள் 6 பேருக்கு தினந்தோறும் ரூ.250 வீதம் அவர்கள் தகவல் அளிக்கும் காலம் வரைக்கும் அபராதம் வசூலித்து நடவடிக்கை எடுத்துள்ளேன்.

வாரந்தோறும் திங்கட்கிழமை தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த மனுக்களை ஆய்வு செய்ய வேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டத்தில் 28 பிரிவுகள் இருக்கிறது. அப்பிரிவுகளில் உள்ள முக்கிய பிரிவுகளை தெரிந்து கொண்டு அணுகினால் அதற்கேற்ற பதில்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே தகவல் ஆணையத்தின் சட்டங்களை முழுமையான தெரிந்து கொண்டு பயனடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு, இந்த சட்டத்தை அலுவலர்கள் தெரிந்து, அதற்கேற்ப மனுதாரர்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என்றார்.


Next Story