சாதுக்களுக்கு அடையாள அட்டை வழங்க கைரேகை எடுக்கும் பணி
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சாதுக்களுக்கு அடையாள அட்டை வழங்க கைரேகை எடுக்கும் பணி நடந்தது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சாதுக்களுக்கு அடையாள அட்டை வழங்க கைரேகை எடுக்கும் பணி நடந்தது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.
அடையாள அட்டை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றியுள்ள கிரிவலப்பாதையில் நூற்றுக்கணக்கான சாதுக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களில் குற்றப்பின்னணி கொண்ட மற்றும் கஞ்சா, சாராயம் போன்றவற்றை சாமியார் போர்வையில் விற்கும் போலி சாமியார்களை கண்டறிய கிரிவலப்பாதையில் வசிக்கும் சாதுக்களுக்கு அடையாள அட்டை வழங்க மாவட்ட காவல்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
அதைத்தொடர்ந்து கிரிவலப்பாதையில் உள்ள சாதுக்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது சாதுக்களின் கைரேகைகள் எடுக்கப்பட்டு குற்ற பின்னணி ஏதேனும் அவர்கள் மீது உள்ளதா என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
இந்த பணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர், சாதுக்களிடம் உங்களோடு சாமியார் என்று போலி சாமியார்கள் எவரேனும் தங்கி கஞ்சா, சாராயம், புகையிலை போன்ற போதை வஸ்துக்களை பயன்படுத்தினாலோ அல்லது விற்றாலோ அவர்கள் குறித்து போலீசார் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ள இலவச செல்போன் எண் 9159616263 என்ற எண்ணுக்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார்.
மேலும் சாதுக்கள் இரவு நேரங்களில் தங்குவதற்கு இடம் அமைத்து தந்தால் அங்கு தங்குவீர்களா என்று கேட்டறிந்தார்.
காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு சாதுக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.
அப்போது திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.