நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு, ஆதார் மூலம் கைரேகை பதிவு கட்டாயம்-இடைத்தரகர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை


நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு, ஆதார் மூலம் கைரேகை பதிவு கட்டாயம்-இடைத்தரகர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை
x

நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்களை கட்டுப்படுத்த, விவசாயிகளுக்கு, ஆதார் மூலம் கைரேகை பதிவு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

மதுரை


நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்களை கட்டுப்படுத்த, விவசாயிகளுக்கு, ஆதார் மூலம் கைரேகை பதிவு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

ஆவணங்கள்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், மதுரை மண்டலத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் சம்பா பருவத்தில் செயல்பட்டு வந்தது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் ஆதார், சிட்டா, வங்கிக்கணக்கு புத்தக நகல் மற்றும் அசல் அடங்கல் ஆவணங்களுடன் சென்று முன்பதிவு செய்து நெல் கொள்முதல் நடைபெற்று வருகிறது.

நேரடி நெல் கொள்முதல் நிலைய அலுவலர், விவசாயிகள் அளிக்கும் ஆவணங்களின் அடிப்படையில் பதிவுகள் மேற்கொள்வார். பதிவு உறுதி செய்யப்பட்டதும், விவசாயிகளின் செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பி வைக்கப்படும். பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் விண்ணப்ப விவரங்கள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பப்பட்டு விவரங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டு அதன் அடிப்படையில் ஒப்புதல் அல்லது நிராகரிப்பு செய்யப்படும்.

ரகசிய எண்

ஒப்புதல் அளிக்கப்பட்ட விவசாயிகள், தாங்கள் பதிவு செய்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு ஆவணங்களுடன் சென்று தங்களின் நெல்லினை விற்பனை செய்து கொள்ளலாம். இந்த நடைமுறை தான் கடந்த மாதம் (மே) 31-ந் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வந்தது. தற்போது கடந்த 1-ந் தேதி முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆதார் மூலம் விவசாயிகளின் கைரேகை பதிவு கட்டாயமாக்கப்பட்டு புதிய நடைமுறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து இ-கே.ஒய்.சி. கொடுத்த பிறகு கையடக்க கருவியில் விவசாயிகளின் கைவிரல் ரேகையை பதிவு செய்த பிறகு விவசாயிகளின் விவரங்கள் தெரிய வரும். அதன் பின்னர் விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யப்படும்.

3 முறை கைவிரல் ரேகையை பதிவு செய்ய முடியவில்லை என்றால் விவசாயிகளின் செல்போன் எண்ணுக்கு வரும் ரகசிய எண்ணை (OTP) உள்ளீடு செய்தால் போதும். அதன்பிறகு கொள்முதல் பதிவுகளை மேற்கொள்ளலாம் என்று நெல் கொள்முதல் ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. இந்த புதிய நடைமுறையால் விவசாயிகள் பெயரில் இடைத்தரகர்கள் நெல்கொள்முதல் செய்வது முற்றிலும் தடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.


Next Story