முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்குப்பதிவு
முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்குப்பதிவு
பல்லடம்
கோவை சாய்பாபா காலனியைச்சேர்ந்தவர் சுந்தர்ராஜன்(வயது 58), இவர் பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தை சேர்ந்த ராமனுடன் வீட்டுமனைகள் விற்பனை செய்து வந்ததார். இந்த நிலையில் அவரிடம் ஈரோட்டை சேர்ந்த தீபக் வீட்டுமனைகளை விற்பனை செய்து தருவதாக கூறினார். அதன் பேரில் 4 பேருக்கு சுந்தர்ராஜனிடம் வீட்டுமனை விற்பனை செய்து தந்தார். இந்த நிலையில், வீட்டுமனைகளை வாங்கித் தருவதாக கூறி சுமார் 20-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1லட்சம் வரை தீபக் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. அவரிடம் பணம் கொடுத்தவர்கள் சுந்தர்ராஜனிடம் போன் செய்து, எப்போது கிரயம் செய்கிறீர்கள் என கேட்ட போது அதிர்ச்சி அடைந்த அவர் தீபக்கிடம் இதுகுறித்து கேட்டபோது, நான் பணம் வாங்கவில்லை என்று அவர் கூறினார். இதையடுத்து பணம் வாங்கியவர்களிடம் திருப்பிக்கொடுத்து விடுங்கள். இனிமேல் உங்களிடம் நான் வியாபாரம் செய்ய தயாராக இல்லை என சுந்தர்ராஜன் கூறினார்.
இந்த நிலையில் அன்பு ரமேஷ், தேவராஜ், அசோகன், சுரேஷ், மற்றும் 10-க்கும் மேற்பட்டவர்கள் வந்து, பயங்கர ஆயுதங்களுடன் வந்து சுந்தர்ராஜனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து பல்லடம் போலீசில் சுந்தர்ராஜன் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.