பனியன் நிறுவன உரிமையாளர் வீட்டில் தீப்பிடித்தது
காங்கயம் அருகே படியூரை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது48). இவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் பொன்னுசாமி நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் தனது வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். பின்னர் இரவு சுமார் 11 மணியளவில் வீட்டிற்கு வந்து கதவை திறந்து உள்ளார். அப்போது வீடு முழுவதும் கரும்புகை நிரம்பி இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு கிரைண்டர், மிக்சிமற்றும் சமையலறையில் இருந்த சமையல் உபகரணங்கள் கருகிய நிலையில் கிடந்தது.
பின்னர் இதுகுறித்து காங்கயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த காங்கயம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு தடயங்களை சேகரித்து தீ விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வீட்டில் தீ விபத்து நடந்த போது யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது