மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
தமிழக அரசின் எந்த நலத்திட்ட உதவியும் கிடைக்கவில்லை என்று கூறி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசின் எந்த நலத்திட்ட உதவியும் கிடைக்கவில்லை என்று கூறி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கலெக்டர் அலுவலகம்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள புளியங்குடி பகுதியை சேர்ந்தவர் வேலு என்பவரின் மகன் திருமால் (வயது40). மாற்றுத்திறனாளியான இவர் நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்தார். தனக்கு அரசின் எந்த நலத்திட்ட உதவிகளும் கிடைக்கவில்லை என்று கூறி உடலில் டீசல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்ட அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை விரைந்து சென்று மடக்கி பிடித்து காப்பாற்றினர்.
இதனை தொடர்ந்து அவரை போலீசார் கேணிக்கரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து திருமால் கூறியதாவது:- மாற்றுத்திறனாளியான எனக்கு இரண்டு கால்களும் இல்லை. திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அவர்களின் கல்விச் செலவிற்கு நான் மட்டுமே உழைத்து சம்பாதிக்க வேண்டி உள்ளது.
எதிர்பார்த்து தோல்வி
இதற்காக 3 சக்கர மோட்டார் சைக்கிள் கேட்டு விண்ணப்பித்தும் இதுவரை வழங்கவில்லை. மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டில் வீடு வழங்க முதல்-அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு மனு அளித்தும் எந்த பயனும் இல்லை. சொந்தமாக பெட்டிக்கடை வைத்து கொள்ள அனுமதி கேட்டும் கிடைக்கவில்லை.
மாதாந்திர உதவித்தொகை கூட பல மாதங்கள் அலைய விட்டு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிக் கொண்டுதான் வழங்கினர். மாற்றுத்திறனாளியான எனக்கு இதுவரை அரசின் எந்த நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவில்லை. அரசிடம் உதவியை எதிர்பார்த்து தோல்வி அடைந்துவிட்டேன். என்னால் வாழ முடியாததால் என்னை கருணை கொலை செய்துவிடுங்கள். அல்லது நான் தற்கொலை செய்து கொள்ளவாவது அனுமதியுங்கள்.
பரபரப்பு
அரசு மாற்றுத்திறனாளிகளுக்காக பல நலத்திட்டங்கள் செய்வதாக கூறிவரும் நிலையில் எந்த உதவியும் கிடைக்காத எனக்கு இனி வாழ்ந்து என்ன பயன் என்ற மனநிலை வந்துவிட்டது. எனக்கு உடனடியாக அரசு வீடு, 3 சக்கர சைக்கிள் உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார். மாற்றுத்திறனாளி ஒருவர் உடலில் டீசல் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.