பாப்பிரெட்டிப்பட்டி அருகே விவசாயி வீட்டில் திடீர் தீ
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அதிகாரப்பட்டி காட்டு வளவு பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 53). விவசாயி. இவர் குடும்பத்துடன் அந்த பகுதியில் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 6-ந் தேதி மாலை சேகர் அருகே உள்ள தனது விவசாய நிலத்தில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அவருடைய வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சேகம் கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த 2 மூட்டை அரிசி, பட்டாக்கள், சான்றிதழ்கள் மற்றும் மாடு விற்ற பணம் ரூ.75 ஆயிரம் ஆகியவை எரிந்து சேதமடைந்தன. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் அ.பள்ளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.