திம்பம் மலைப்பாதையில் சென்றபோது திடீரென தீப்பிடித்து எரிந்த கார்; 4 பேர் உயிர் தப்பினர்


திம்பம் மலைப்பாதையில் சென்றபோது திடீரென தீப்பிடித்து எரிந்த கார்; 4 பேர் உயிர் தப்பினர்
x

திம்பம் மலைப்பாதையில் சென்றபோது கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

ஈரோடு

தாளவாடி

திம்பம் மலைப்பாதையில் சென்றபோது கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

கார் தீப்பிடித்தது

கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்தவர் முகமது கபில். இவர் நேற்று ைமசூருவில் இருந்து கோைவ மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். உடன் அவரது உறவினர்கள் 3 பேர் பயணம் செய்தனர். ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த திம்பம் மலைப்பாதையின் 19-வது கொண்டை ஊசி வளைவு அருகே மதியம் 1.30 மணி அளவில் சென்றபோது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த முகமது கபில் ரோட்டோரமாக காரை நிறுத்தினார். பின்னர் காரில் இருந்து 4 பேரும் கீழே இறங்கி நின்றார்கள். அப்போது கார் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.

உயிர் தப்பினர்

மளமளவென பரவிய தீ கொழுந்துவிட்டு எரிந்தது. உடனே இதுபற்றி ஆசனூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் தண்ணீரை பீய்ச்சி அடித்து காரில் எரிந்த தீயை அணைத்தனர்.

எனினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. காரில் இருந்து உடனடியாக 4 பேரும் இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போக்குவரத்து பாதிப்பு

தீயணைப்பு வாகனம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதால் திம்பம் மலைப்பாதை வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. ரோட்டின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகே தீ அணைக்கப்பட்டது. அதன்பின்னரே தீயணைப்பு வாகனம் அங்கிருந்து சென்றது. போக்குவரத்து நிலைமையும் சீரானது.

மலைப்பாதையில் சென்றபோது திடீரென கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story