சோபா கம்பெனியில் தீ விபத்து; ரூ.25 லட்சம் பொருட்கள் சேதம்


சோபா கம்பெனியில் தீ விபத்து; ரூ.25 லட்சம் பொருட்கள் சேதம்
x

கும்பகோணம் அருகே சோபா கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.

தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே சோபா கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.

சோபா கம்பெனி

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனத்தில் தொழிற்பேட்டை உள்ளது. இங்கு கும்பகோணம் பாலச்சந்தர் என்பவருக்கு சொந்தமான கடையில் கும்பகோணம் ஜெகநாத பிள்ளையார் கோவில் கீழவீதியை சேர்ந்த சுரேஷ்(வயது 37) என்பவர் சோபா, பெட் கம்பெனியை நடத்தி வந்தார்.

கடையின் விரிவாக்கத்திற்காக தகர செட் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வந்தன. இதையொட்டி ேநற்று அங்கு வெல்டிங் செய்யும் பணி நடந்தது. அப்போது திடீரென தீப்பிடித்தது. அங்கு இருந்த மரச்சட்டங்கள், பஞ்சு, சோபா போன்ற பொருட்கள் மீது தீ மள, மளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் கரும்புகை மேலே எழும்பியதால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அச்சம் அடைந்தனர்.

ரூ.25 லட்சம் சேதம்

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கும்பகோணம், திருவிடைமருதூர் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை முழுவதுமாக அணைத்தனர்.

இதனிடையே விபத்து நடந்த பகுதியில் கியாஸ் வெளியாகி கொண்டிருந்த சிலிண்டர் ஒன்றை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக எடுத்து வந்து தண்ணீரில் போட்டனர். தீயில் பெரும்பாலான பொருட்கள் எரிந்து நாசமானதால் ரூ.25 லட்சம் வரை சேதம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சோபா கம்பெனியில் தீ விபத்து நடந்ததால் திருபுவனம் தொழிற்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story