திண்டுக்கல் அருகே நூற்பாலையில் பயங்கர தீ
திண்டுக்கல் அருகே நூற்பாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு அருகே உள்ள செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவர், அதே பகுதியில் நூற்பாலை நடத்தி வருகிறார். இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். வழக்கம் போல் இன்று மாலை ஆலையில் ஊழியர்கள் வேலை செய்து ெகாண்டிருந்தனர். அப்போது எந்திரத்தில் மின்கசிவு காரணமாக திடீரென்று தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. சிறிதுநேரத்தில் மளமளவென நூற்பாலை முழுவதும் தீ பரவியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஒரு சிலர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ வேகமாக பரவியதால் அவர்களால் அணைக்க முடியவில்லை. இதுகுறித்து திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் தனியாருக்கு சொந்தமான 4 தண்ணீர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ.75 லட்சம் மதிப்புள்ள எந்திரங்கள் மற்றும் பஞ்சு பேல்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நூற்பாலையில் பற்றி எரிந்த தீயால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.