குப்பைக்கிடங்கில் மீண்டும் தீ விபத்து
நாகர்கோவில் குப்பைக்கிடங்கில் நேற்று திடீரென மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. 3 தண்ணீர் லாரிகளில் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் போராடி வருகிறார்கள்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் குப்பைக்கிடங்கில் நேற்று திடீரென மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. 3 தண்ணீர் லாரிகளில் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் போராடி வருகிறார்கள்.
குப்பை கிடங்கு
நாகர்கோவில் பீச்ரோடு சந்திப்பில் வலம்புரிவிளை குப்பைக்கிடங்கு உள்ளது. இங்கு, நாகர்கோவில் நகரில் சேகரிக்கப்படும் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக கொட்டப்பட்ட குப்பை தற்போது மலைபோல் குவிந்து கிடக்கிறது.
நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த குப்பைக்கிடங்கைச் சுற்றிலும் குடியிருப்புகள் அமைந்துள்ளன. இங்கு அடிக்கடி தீவிபத்து ஏற்படுகிறது. அப்போது இந்த குப்பைக்கிடங்கில் இருந்து எழும் துர்நாற்றம் அங்குள்ள குடியிருப்புவாசிகளை மிகுந்த அவதிக்குள்ளாக்கி வருகிறது. மேலும் அந்த வழியாக வாகனங்களில் செல்வோரும் துர்நாற்றத்தால் பெரும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே இந்த குப்பைக்கிடங்கை இந்தப்பகுதியில் இருந்து மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.
தீ விபத்து
எனவே இந்த குப்பைக்கிடங்கில் உள்ள குப்பைகளை தரம்பிரிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே அடிக்கடி தீவிபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. தீவிபத்து ஏற்படும்போதெல்லாம் தீயணைப்பு படையினர் தீயை அணைக்க கடுமையாக போராட வேண்டியது உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இருமுறை தீவிபத்து ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை சுமார் 11.30 மணி அளவில் குப்பைக்கிடங்கின் பிரதான வாயில் அருகே இடதுபுறம் மலைபோல் குவிந்துள்ள குப்பையில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
உடனே இதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மாவட்ட தீயணைப்பு அதிகாரி தென்னரசு, நாகர்கோவில் தீயணைப்பு நிலைய அதிகாரி (பொறுப்பு) பென்னட் தம்பி மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு 3 தண்ணீர் லாரிகளுடன் விரைந்து சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் தீ குப்பையில் வேகமாக பற்றி எரிந்ததால் தீயை அணைக்க தீயணைப்பு படையினர் கடுமையாக போராடினர். இதனால் மாலை வரை தீயணைக்கும் பணி தொடர்ந்தது.