பேக்கரி கடையில் தீ விபத்து; ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
காரையூர் அருகே மேலத்தானியத்தில் பேக்கரி கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. 2 பேருக்கு காயம் ஏற்பட்டது.
பேக்கரி கடையில் தீ
காரையூர் அருகே மேலத்தானியம் சந்தைப்பேட்டையில் துவரங்குறிச்சியை சேர்ந்த ராசு மகன் செந்தில் (வயது 38) என்பவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் நேற்று பேக்கரி கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று காலை பேக்கரியில் உள்ள சிலிண்டர் குழாயில் ஏற்பட்ட கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் பேக்கரியில் உள்ள பொருட்கள், பேக்கரியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள உணவு பொருட்கள் உள்பட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.
உரிமையாளர் உள்பட 2 பேர் காயம்
இதில் பேக்கரியில் வேலை செய்த எம்.உசிலம்பட்டியை சேர்ந்த வேலுச்சாமி (40), பேக்கரி கடை உரிமையாளர் செந்தில் ஆகிய 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. காயமடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக காரையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் வேலுச்சாமி மட்டும் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.