மளிகை கடையில் தீ விபத்து
கூத்தாநல்லூர் அருகே மளிகை கடையில் தீ விபத்துரூ.50 ஆயிரம் பொருட்கள் எரிந்து நாசமானது
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம், உச்சுவாடி நேதாஜி தெருவை சேர்ந்த கணேசன் மனைவி சாந்தி(வயது 50). இவர், அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்தபிறகு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். அதன் பின்னர் இரவு சுமார் 11-50 மணியளவில் திடீரென அந்த மளிகை கடையின் கொட்டகையில் தீப்பற்றி எரிந்தது. இதனை கண்டதும் சாந்தி மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடிச்சென்று தீயை அணைக்க முயன்றனர். ஆனால், காற்றின் வேகத்தால் தீ கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த தீ விபத்தில் கடையில் உள்ள மளிகை உள்பட ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து வடபாதிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.