கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ: 3-வது நாளாக அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்


கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ: 3-வது நாளாக அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்
x

கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை 3-வது நாளாக அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கரூர்

குப்பை கிடங்கில் தீ

கரூரில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் அரசு காலனியில் இருந்து சற்று தொலைவில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் கடந்த 31-ந்தேதி மாலை சுமார் 5.30 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனையடுத்து கரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

எனினும் காற்றின் வேகத்தால் தொடர்ந்து குப்பை கிடங்கில் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். 2-வது நாளாக நேற்றுமுன்தினம் குப்பையை கிளறி தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்ட போதிலும் தீ முழுவதும் அணையவில்லை.

தீயணைப்பு வீரர்கள்

3-வது நாளாக நேற்றும் தீ எரிந்து கொண்டு இருந்தது. இதனால் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் குப்பைகளை கிளறியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் தீயை அணைக்கும் முயற்சியில் கரூர், புகழூர், அரவக்குறிச்சி, முசிறி ஆகிய தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த 30- க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 3 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 3 பொக்லைன் எந்திரங்கள், 10-க்கும் மேற்பட்ட குடிநீர் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தால் கரூர்-வாங்கல் சாலை கடந்த 3 நாட்களாக புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

புகை மண்டலம்

இந்த புகை மண்டலத்தால் கரூர்-வாங்கல் சாலையில் 31-ந் தேதி மற்றும் 1-ந்தேதி ஆகிய 2 நாட்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.

இந்நிலையில் நேற்று இந்த சாலையில் ஏராளமானவர்கள் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் புகை சூழ்ந்த பகுதியில் சென்று வருகின்றனர். புகை மண்டலமாக காட்சி அளிக்கும் சாலையில் இருபுறமும் வாகனங்கள் சென்று வருவதால், எதிர்திசையில் வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது எனவும், தீ முழுவதும் அணையும் வரை மாற்றுப்பாதையில் வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story