நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் தீ பயணிகள் அலறியடித்து ஓட்டம்
நாகா்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் பயணிகள் வருகையால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். நேற்று காலை 6.30 மணியளவில் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகளை சுத்தம் செய்யும் பணி நடந்தது. இதற்காக முதலாவது நடைமேடை பகுதியில் உள்ள அறையில் இருந்து பினாயில் மற்றும் திராவகம் உள்ளிட்ட பொருட்களை ஊழியர்கள் எடுத்து சென்று நடைமேடைகளை தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தூய்மைபடுத்தும் பணிக்கான பொருட்கள் வைக்கப்பட்டு இருந்த அறையில் இருந்து திடீரென புகை மூட்டம் கிளம்பியது. இதனை கண்ட ஊழியர்கள் மற்றும் பயணிகள் சத்தமிட்டனர். பயணிகள் பலரும் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரெயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் அறைக்கதவை திறந்தனர். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த திராவகம் உள்ளிட்ட பொருட்களில் தீ பற்றி எரிந்தது.
பொருட்கள் நாசம்
உடனே தீயை அணைக்கும் பணியில் போலீசார் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. அதைத்தொடர்ந்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் ரெயில் நிலையத்துக்கு விரைந்து வந்து சுமார் ½ மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் அறையில் இருந்த ஒரு நாற்காலி மற்றும் சுத்தம் செய்ய பயன்படுத்தும் திராவகம், பிளிச்சிங் பவுடர் கேன், பினாயில் கேன்கள் மற்றும் துடைப்பம் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாயின. மேலும் அறையின் கதவும் எரிந்து முற்றிலுமாக சேதமடைந்தது.
ஊழியர்களின் கவனக்குறைவா?
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், சுத்தம் செய்யும் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் வைக்கப்பட்டிருந்த பினாயில், திராவகம் மற்றும் பிளிச்சிங் பவுடர் ஆகியவை வெப்பத்தின் காரணமாக வேதியியல் மாற்றம் ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதேநேரத்தில் ஊழியர்களின் கவனக்குறைவால் தீ விபத்து நடந்ததா என்றும் கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் இதில் ஊழியர்கள் தவறு இல்லை என்பது உறுதியாகி உள்ளது என்றனர். தீ விபத்து தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே மதுரை ரெயில் நிலையத்தில் சுற்றுலா ரெயில் பெட்டியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்ட நிலையில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.