எருக்கூர் நவீன அரிசி ஆலை குேடானில் தீவிபத்து


எருக்கூர் நவீன அரிசி ஆலை குேடானில் தீவிபத்து
x
தினத்தந்தி 18 Dec 2022 12:15 AM IST (Updated: 18 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

எருக்கூர் நவீன அரிசி ஆலை குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் தவிடு மூட்டைகள் எரிந்து நாசமாகின.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

எருக்கூர் நவீன அரிசி ஆலை குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் தவிடு மூட்டைகள் எரிந்து நாசமாகின.

நவீன அரிசி ஆலை

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே எருக்கூர் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு சொந்தமான நவீன அரிசி ஆலை உள்ளது. இந்த அரிசி ஆலையின் மூலம் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகள் லாரிகள் மூலம் இங்கு எடுத்து வரப்பட்டு ஊறல் போடப்பட்டு உலர வைக்கப்படும். பின்னர் அரைக்கப்பட்டு அரிசியாக ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. இங்கு நெல் அரைக்கப்படும் போதும், நெல் அவிக்கும் போதும் எரியூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் உமி, கரி துகள்களுடன் சேர்ந்து வெளியேறும்போது அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பறந்து சுற்றுப்புறத்தில் மாசுபடாதவாறு இருக்கும் வகையில் வெளியே பறந்து வராத வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கரியுடன் கூடிய உமி துகள்கள் அங்குள்ள குடோன் பகுதிக்குள் செல்லுமாறு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தீயில் எரிந்து தவிடு மூட்டைகள் நாசம்

இந்த நவீன அரிசி ஆலையில் மயிலாடுதுறை மாவட்ட பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் போதிய அளவுக்கு இருப்பு வைக்கும் வகையில், நவீன தொழில்நுட்பம் வாய்ந்த நீண்ட நெல் மூட்டைகளை கெடாமல் பாதுகாத்து வைக்கும் வகையில் சைலோ சிஸ்டம் அமைக்கப்பட்டு அதில் பல லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆலையில் நெல் அரவை செய்யும்போது, அரவை எந்திரத்தின் மூலம் வெளியேறும் தவிடு மற்றும் உமி ஆகியவைகள் அங்குள்ள குடோனில் சேமித்து வைக்கப்பட்டு வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு திடீரென இந்த குடோனில் தீப்பிடித்து எரிந்தது. தீவிபத்தில் குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தவிடு மூட்டைகள் எரிந்து நாசமாகின. இதனை பார்த்த அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக சீர்காழி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்தும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story