திருச்சி காந்திமார்க்கெட்டில் அடுத்தடுத்த 3 கடைகளில் தீ விபத்து
திருச்சி காந்திமார்க்கெட்டில் அடுத்தடுத்த 3 கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது.
திருச்சி காந்திமார்க்கெட்டில் அடுத்தடுத்த 3 கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது.
பெட்டி கடையில் தீ
திருச்சி காந்தி மார்க்கெட் காய்கறி சந்தையில் மாரிமுத்து (வயது 80). என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் பிளாஸ்டிக் பொருட்கள், குளிர் பானம் மற்றும் பழைய இருப்பு பொருட்கள் வைத்து வியாபாரம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மதியம் 2.30 மணி அளவில் கடையை பூட்டு விட்டு சென்றார். இதையடுத்து இரவு 8 மணியளவில் அவரது கடையில் இருந்து கரும்புகை வந்தது. பின்னர் சிறிது நேரத்தில் தீ மளமளவென பற்றி எரிந்தது. மேலும் இந்த தீ அருகில் இருந்த கணேசன் என்பவரது கடை, சாதிக் பாட்ஷா என்பவரது காய்கறி கடை ஆகியோரது கடைகளுக்கும் பரவியது.
இதை கண்ட அப்பகுதியினர் திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீ தடுப்பு உதவி மாவட்ட அலுவலர் சத்தியவர்த்தனன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை மேலும் பரவ விடாமல் தடுத்து அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் 3 கடைகள் முழுவதும் எரிந்து நாசமாயின.
மின் கசிவு
இதையடுத்து அங்கு வந்த காந்தி மார்க்கெட் போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் பெட்டிக்கடையில் உள்ள பிரிட்ஜில் இருந்து ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் காந்திமார்க்கெட் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.