தீயணைப்பு துறை ஊழியர் மர்ம சாவு


தீயணைப்பு துறை ஊழியர் மர்ம சாவு
x
தினத்தந்தி 30 May 2023 12:30 AM IST (Updated: 30 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தீயணைப்பு துறை ஊழியர் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டதாக தந்தை போலீசில் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் தீயணைப்பு துறை ஊழியர் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டதாக தந்தை போலீசில் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

தீயணைப்பு துறை ஊழியர்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெரியநாயகிபுரத்தைச் சேர்ந்தவர் அர்ஜூனன். இவர் நேற்று தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் ஒரு மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

நான் சர்வேயராக பணிபுரிந்து ஓய்வு பெற்று தற்போது வீட்டில் இருந்து வருகிறேன். எனது மகன் கலைச்செல்வனுக்கும், சென்னையை சேர்ந்த முத்தையா என்பவரின் மகள் நிவேதா என்பவருக்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கு 6 மாத குழந்தை உள்ளது. ஆனால் கணவன்-மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

கலைச்செல்வன் தூத்துக்குடி துறைமுகத்தில் தீயணைப்பு துறையில் கடந்த 5 வருடமாக பணிபுரிந்து துறைமுக குடியிருப்பு பாரதிநகரில் வசித்து வந்தார்.

காயங்களுடன் இறந்து கிடந்தார்

கடந்த மாதம் 13-ந் தேதி அன்று எனது மகன், அவன் குடியிருக்கும் வீட்டிலிருந்து பக்கத்து வீட்டின் ஒதுக்குப்புறமான பகுதியில் இறந்து கிடந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடம்பில் பல்வேறு இடங்களிலும் காயங்கள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. மாடியில் இருந்து விழுந்தால் அவனது உடலில் ரத்தக்காயங்கள் ஏற்பட்டு இருக்கும். ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. மேலும் அவன் தற்கொலை செய்து கொள்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

எனவே எனது மகன் கலைச்செல்வன் மரணத்தில் மர்மம் உள்ளது. அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது. எனவே வீட்டின் அருகில் உள்ளவர்கள், உடன் பணிபுரிந்த நபர்கள் அனைவரையும் விசாரணை செய்ய வேண்டும். எனது மகன் உபயோகித்த 2 செல்போன்கள், பிரேத பரிசோதனை அறிக்கை போன்றவற்றை ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story