கூடலூர் அருகே வாழை தோட்டத்தில் பயங்கர தீ; 100 மரங்கள் எரிந்து நாசம்
கூடலூர் அருகே வாழை தோட்டத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் 100 வாழை மரங்கள் எரிந்து நாசமானது.
கூடலூர் புறவழிச்சாலை பகுதியில் உத்தமபாளையத்தை சேர்ந்த நத்தர்மீரான் என்பவருக்கு சொந்தமான தேட்டம் உள்ளது. இந்த தோட்டத்தை காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த சுரேஷ் என்பவர் குத்தகைக்கு எடுத்து வாழை சாகுபடி செய்துள்ளார். தற்போது அந்த தோட்டத்தின் ஒரு பகுதியில் மட்டும் வாழைத்தார்கள் வெட்டி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் வாழை மரங்கள் காய்ந்த நிலையில் இருந்தன. மற்ற பகுதிகளில் வாழைகள் வெட்டும் பருவத்தில் இருந்தன.
இந்தநிலையில் தோட்டத்தில் காய்ந்த வாழை மரங்களில் நேற்று திடீரென்று தீப்பிடித்தது. அப்போது வீசிய காற்றால் தோட்டத்தின் மற்ற பகுதிகளுக்கும் தீ பரவியது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக கம்பம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜலட்சுமி தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தோட்டத்தில் எரிந்த தீயை போராடி அணைத்தனர்.
இருப்பினும் 100 வாழைகள் எரிந்து நாசமானது. அவற்றில் ஏராளமான வாழைகள் வெட்டும் பருவத்தில் இருந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர். வாழை தோட்டத்தின் மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் உராய்வு ஏற்பட்டு வாழைகள் மீது தீப்பிடித்து இருக்கலாம் என்று தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்