உளுந்தூர்பேட்டை அருகே தீ விபத்து: 3 கூரை வீடுகள் எரிந்து சேதம்
உளுந்தூர்பேட்டை அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 3 கூரை வீடுகள் எரிந்து சேதமானது.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி (வயது 55). இவரது கூரை வீடு நேற்று மாலை திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது காற்று பலமாக வீசியதால், அருகில் இருந்த ராஜாங்கம்(45), பாலமுருகன்(32) ஆகியோரின் வீடுகளுக்கும் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர்.
இதற்கிடையே அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் தண்ணீர் மற்றும் மணல் மூலம் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் அவர்களால் முடியவில்லை.
இதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும் 3 வீடுகளில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து திருநாவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீ விபத்தில் 3 கூரை வீடுகள் எரிந்து சேதமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.