புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த என்ஜினீயர் காமராஜர் அணை பகுதிக்கு அடித்து செல்லப்பட்டாரா? தீயணைப்பு படைவீரர்கள் தேடினர்


புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த என்ஜினீயர் காமராஜர் அணை பகுதிக்கு அடித்து செல்லப்பட்டாரா? தீயணைப்பு படைவீரர்கள் தேடினர்
x

புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த என்ஜினீயர் காமராஜர் அணை பகுதிக்கு அடித்து செல்லப்பட்டாரா? என்ற கோணத்தில் தீயணைப்பு படைவீரர்கள் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மேலசத்திரத்தை சேர்ந்தவர் நாகநாதசேதுபதி. அவருடைய மகன் அஜய்பாண்டியன் (வயது 28). இவர், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமமான மங்களம்கொம்புவில் குத்தகைக்கு தோட்டம் எடுத்து ஏலக்காய் விவசாயம் செய்து வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர், தனது நண்பர் கல்யாணசுந்தரம் (25) என்பவருடன் பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு சென்றார். நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள பாறையில் இறங்கிய அஜய்பாண்டியனை, கல்யாணசுந்தரம் செல்போனில் படம் பிடித்து கொண்டிருந்தார். அப்போது அஜய்பாண்டியன் திடீரென்று பாறையில் இருந்து வழுக்கி நீர்வீழ்ச்சி தடாகத்தில் விழுந்தார். இதில், தண்ணீரில் அவர் அடித்து செல்லப்பட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தாண்டிக்குடி போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள், நீர்வீழ்ச்சியில் விழுந்த வாலிபரை தேடும் பணியில் ஈடுபட்டனர். 3-வது நாளாக இன்று அவரை தேடும் பணி நடந்தது. புல்லாவெளி நீர்வீழ்ச்சி வழியாக பாயும் தண்ணீர், ஆத்தூர் காமராஜர் அணைக்கு செல்கிறது.

இதனால் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த அஜய்பாண்டியன் காமராஜர் அணைக்கு அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் நேற்று தீயணைப்பு படைவீரர்கள் மற்றும் போலீசார் அணைக்கு தண்ணீர் வரும் கன்னிமார் கோவில் பகுதியில் தேடி பார்த்தனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தீயணைப்பு படைவீரர்கள் தேடினர்.

ஆனால் நேற்று மாலை 6 மணி வரை தேடியும் அவர் கிடைக்கவில்லை. இருப்பினும் அஜய்பாண்டியனை தேடும் பணி நாளை (சனிக்கிழமை) மீண்டும் நடைபெறும் என்று தீயணைப்பு படைவீரர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story