2 வீடுகள் தீப்பிடித்து எரிந்தது; மூதாட்டி படுகாயம்
ஆண்டிப்பட்டி அருகே 2 வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. மூதாட்டி படுகாயம் அடைந்தார்.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள அமச்சியாபுரத்தை சேர்ந்தவர் அழகுமலை (வயது 70). இவரது மனைவி நாகம்மாள் (68). இவர்கள் தகர கூரையால் வேயப்பட்ட வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டுக்கு மின் இணைப்பு இல்லை. இதனால் இரவு நேரங்களில் வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றி, அதன் வெளிச்சத்தில் வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வயதான தம்பதி 2 பேரும், வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்துவிட்டு தூங்கினர். நள்ளிரவு 1.30 மணி அளவில் மெழுகுவர்த்தி கரைந்து வீட்டில் இருந்த துணிகளில் தீப்பிடித்தது. இதில் வீடு முழுவதும் தீ மளமளவென பரவி பற்றி எரிந்தது. இதனால் திடுக்கிட்டு எழுந்த அழகுமலையும், நாகம்மாளும் வீட்டைவிட்டு வெளியேற முயன்றனர். அப்போது வீட்டுக்குள் நாகம்மாள் சிக்கிக்கொண்டார். இதில், அவர் மீது தீப்பற்றியது. இதனை பார்த்த அழகுமலை, தனது மனைவியை மீட்டார். இருப்பினும் அவர் படுகாயம் அடைந்தார். இதற்கிடையே அழகுமலை வீட்டில் பற்றி எரிந்த தீ, பக்கத்தில் இருந்த மற்றொரு வீட்டில் பற்றி எரிந்தது. அந்த வீட்டில் உள்ளவர்கள் உடனே வெளியேறிவிட்டனர். இதனால் உயிர்தப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தேனி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, 2 வீடுகளில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். பின்னர் காயமடைந்த நாகம்மாள் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து க.விலக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா.