திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
வாழப்பாடி அக்ரஹாரம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
வாழப்பாடி
வாழப்பாடி அக்ரஹாரம் பகுதியில் திரவுபதி அம்மன் கோவில் தீ மிதி திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அர்ஜுனன்-திரவுபதி அம்மன் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதற்காக பெண் வீட்டாரான மன்னாய்க்கன்பட்டி கிராமத்தினரும், மாப்பிள்ளை வீட்டாரான கல்யாணகிரி கிராமத்தினரும், வாழப்பாடி திரவுபதி அம்மன் கோவிலுக்கு, மேள வாத்தியம் முழங்க சீர்வரிசை தாம்பூலத்துடன் வந்தனர். அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்ற முடிவில் பங்கேற்ற பக்தர்கள், உறவினர் வீட்டிற்கு திருமணத்திற்கு வந்ததை போல வணங்கி வாழ்த்தி, பணம் கொடுத்து மொய் எழுதிச்சென்றனர். அம்மன் திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் விருந்து வைக்கப்பட்டது. மேலும் நேற்று அதிகாலை கோவில் முன்பு குவிந்த பக்தர்கள் கருடனை கண்டு பரவசம் அடைந்து வணங்கினர். தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் மற்றும் ஊர் பெரிய தனக்காரரர்கள், சாமி சிலைகளை தோளில் சுமந்தபடி, வாழப்பாடியின் முக்கிய தெருக்களின் வழியாக மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்தனர். பின்னர் சந்தை திடலில் அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் தீ மிதித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். தம்பதிகள், தங்களின் குழந்தைகளை தோளில் சுமந்தபடி தீ மிதித்த காட்சி காண்போரை பக்தி பரவசம் அடைய செய்தது.