அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்


அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்
x

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என கலெக்டர் லலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என கலெக்டர் லலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன.பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள முதியவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

பட்டாசுகள் வெடிக்க வேண்டும்

தமிழக அரசு தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டை போலவே காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கி உள்ளது. எனவே அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களில்...

மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்கவேண்டும்.அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.ஆஸ்பத்திரிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story