பட்டாசை கொளுத்தி வீசி போலீஸ்காரர் மீது சரமாரி தாக்குதல்


பட்டாசை கொளுத்தி வீசி போலீஸ்காரர் மீது சரமாரி தாக்குதல்
x

வேடசந்தூர் அருகே நடந்த கோவில் திருவிழாவில், பட்டாசை கொளுத்தி வீசி போலீஸ்காரரை சரமாரியாக தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

போலீஸ்காரர் மீது தாக்குதல்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு ஒட்டன்சத்திரம் ரோட்டில் உள்ளது வாய்க்கால்கரை. இங்குள்ள மதுரைவீரன் கோவில் திருவிழாவையொட்டி, சுவாமி ஊர்வலம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. அப்போது அங்கு வேடசந்தூர் போலீஸ்காரர் பாலமுருகன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது ஆத்துமேடு டாஸ்மாக் கடை முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக மோட்டார் சைக்கிள் ஒன்று நின்று கொண்டிருந்தது. இதனை பார்த்த பாலமுருகன், அங்கிருந்தவர்களிடம் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்துமாறு கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த 5 பேர் கொண்ட கும்பல், போலீஸ்காரர் என்று கூட பாராமல் பாலமுருகன் மீது பட்டாசை கொளுத்தி வீசினர். இதில் அவரது செருப்பு பிய்ந்து காலில் காயம் ஏற்பட்டது.

இருப்பினும் ஆத்திரம் அடங்காத அவர்கள் பாலமுருகனை அடித்து உதைத்து தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் அவரை அசிங்கமாக பேசி, பாலமுருகனின் செல்போனை பிடுங்கி ரோட்டில் போட்டு உடைத்தனர்.

வண்டியை ஏற்றி கொலை செய்து விடுவோம் என்று பாலமுருகனுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் வேடசந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

3 பேர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்- இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர். பின்னர் தாக்குதலில் காயம் அடைந்த பாலமுருகனை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மேலும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பாலமுருகனை தாக்கியது, வேடசந்தூர் தம்மனம்பட்டியை சேர்ந்த ராஜபாண்டி (வயது 30), காசாநகரை சேர்ந்த குமரேசன் (32), அண்ணாநகரை சேர்ந்த காட்டுப்பூச்சி என்ற மாரிமுத்து (30), குங்கும காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வடிவேல் (35), அய்யனார் நகரை சேர்ந்த வெள்ளைச்சாமி (40) என்று தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரேசன், மாரிமுத்து, வெள்ளைச்சாமி ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவான ராஜபாண்டி, வடிவேல் ஆகியோரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

செல்போன் பறிமுதல்

இதற்கிடையே ராஜபாண்டியின் செல்போன் செயல்பாட்டை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது வேடசந்தூரை அடுத்த சேனன்கோட்டையில் சிக்னல் காட்டியது. இதனையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர்.

அப்போது அங்குள்ள காட்டுப்பகுதியில் ராஜபாண்டியின் செல்போன் மட்டும் கிடந்தது. அங்கு செல்போனை வீசி விட்டு அவர் தப்பி ஓடியது தெரியவந்தது. இதனையடுத்து அந்த செல்போனை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

------


Next Story