மீட்பு உபகரணங்களை தயார்படுத்திய தீயணைப்பு படை வீரர்கள்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்காக மீட்பு உபகரணங்களை தீயணைப்பு படை வீரர்கள் தயார்படுத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் வருகிற அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்யும். பருவமழையின் போது வெள்ளம் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.
இதையொட்டி நெல்லை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் உத்தரவின் பேரில் பாளையங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய உதவி மாவட்ட அலுவலர் கார்த்திகேயன் மற்றும் மீட்பு வீரர்கள் பருவமழை எதிர்கொள்ள தயார் நிலையில் சிறப்பு உபகரணங்கள் மற்றும் மீட்பு பணிக்கான உபகரணங்களை பரிசோதித்து தயார்படுத்தினர்.
மேலும் மாவட்டத்தில் உள்ள 8 தீயணைப்பு நிலையங்களிலும் இதுபோல் தயார் நிலையில் உள்ளனர். இந்த ஏற்பாடுகளை மாவட்ட உதவி மாவட்ட அலுவலர் வெட்டும் பெருமாள் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.