பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 தொழிலாளர்கள் உடல் சிதறி பலி
சேலம் அருகே பட்டாசு ஆலையில் நேற்று மாலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 3 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியானார்கள். படுகாயம் அடைந்த 6 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம்,
சேலம் அருகே உள்ள மஜ்ராகொல்லப்பட்டி சடையாண்டியூர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவருக்கு வெங்கடேசன், சதீஷ்குமார் (வயது 41) என்ற 2 மகன்கள் இருந்தனர். கந்தசாமி சர்க்கார்கொல்லப்பட்டி விவசாய தோட்டம் பகுதியில் பட்டாசு ஆலை வைத்திருந்தார். இவர் வேறு ஒருவர் பெயரில் இந்த ஆலையை நடத்தி வந்தார்.
சதீஷ்குமார் மஜ்ராகொல்லப்பட்டியில் வானம் என்ற பெயரில் பட்டாசு விற்பனை கடை நடத்தி வந்தார். இதை கந்தசாமி கவனித்து வருவதால், பட்டாசு ஆலையை வெங்கடேசன், சதீஷ்குமார் ஆகியோர் நடத்தி வந்தனர்.
பட்டாசு ஆலையில் நாட்டு வெடிகள் மற்றும் வாணவேடிக்கை பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
வெடி விபத்து
பட்டாசு ஆலையில் நேற்று சதீஷ்குமார் மற்றும் 6 பெண்கள் உள்பட 12 பேர் வேலை பார்த்து வந்துள்ளனர். இதில் 3 பேர் மதியத்துக்கு பிறகு சாப்பிட சென்றுவிட்டனர். இதனால் ஆலையில் 9 பேர் மட்டுமே வேலை பார்த்தனர்.
இந்த நிலையில் மாலை 4 மணி அளவில் திடீரென பட்டாசு ஆலையில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு ஆலை தரை மட்டமானதுடன் அந்த இடமே புகை மண்டலமாக காட்சியளித்தது. மேலும் அங்கு தீ கொழுந்துவிட்டு எரிந்தது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.
3 பேர் பலி
இந்த வெடி விபத்தில் சதீஷ்குமார், மஜ்ரா கொல்லப்பட்டியை சேர்ந்த நடேசன் (50) மற்றும் எம்.கொல்லப்பட்டியை சேர்ந்த பானுமதி (55) ஆகியோர் உடல் சிதறி இறந்து கிடந்தனர். சதீஷ்குமாரின் இடது கை துண்டாகி 300 மீட்டர் தொலைவில் உள்ள சோள வயலில் விழுந்தது. இந்த வெடி விபத்தில் மஜ்ரா கொல்லப்பட்டியை சேர்ந்த மோகனா (38), வசந்தா (45), மகேஷ்வரி (34), மணிமேகலை (36), பிரபாகரன் (30), பிருந்தா (28) ஆகியோர் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். வெடிவிபத்து பற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த சூரமங்கலம் தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
எரியும் நெருப்புடன் ஓடிவந்தனர்
வெடி விபத்து ஏற்பட்டபோது ஆலையில் இருந்து உடலில் தீப்பற்றி எரிந்த நிலையில் பெண்கள் உள்பட 6 பேர் வெளியே ஓடி வந்ததாகவும், அலறி துடித்தபடி வந்த அவர்கள் ஆங்காங்கே தீக்காயத்துடன் உடல் கருகி விழுந்தனர் என்றும், இந்த காட்சி சினிமாவில் வருவது போல் இருந்ததாகவும் வெடி விபத்தை பார்த்த சிலர் கூறினர்.