பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கி 2 அறைகள் வெடித்துச்சிதறின
பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கியதில் 2 அறைகள் வெடித்துச்சிதறின.
தாயில்பட்டி,
பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கியதில் 2 அறைகள் வெடித்துச்சிதறின.
பட்டாசு ஆலை
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணை கங்கரக்கோட்டையில் கீழச்செல்லையாபுரத்தை சேர்ந்த கந்தசாமி (வயது 50). என்பவருக்கு சொந்தமான நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 40-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இங்கு 80 தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
நேற்று மாலை அந்த பகுதியில் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பட்டாசு ஆலையில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் உடனடியாக பட்டாசு அறைகளை விட்டு வெளியேறினர்.
2 அறைகள் தரைமட்டம்
திடீரென மின்னல் தாக்கியதில் மருந்து கலக்கும் அறை, மருந்து செலுத்தக்கூடிய அறை ஆகிய 2 அறைகளும் வெடித்துச்சிதறி தரைமட்டமாகின. சம்பவம் நடந்த சிறிது நேரத்திற்கு முன்பாக தொழிலாளர்கள் பட்டாசு ஆலையை விட்டு வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை..
இதுகுறித்து தகவல் அறிந்த ஏழாயிரம்பண்ணை தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இதுகுறித்து தகவல்அறிந்த சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சிவகுமார், ஏழாயிரம்பண்ணை இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், வெம்பக்கோட்டை தாசில்தார் ரெங்கநாதன், தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் மணிகண்டன் ஆகியோர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். இதுகுறித்து ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.