தோட்ட காவலாளி மீது துப்பாக்கிச்சூடு
பழனி அருகே தோட்ட காவலாளியை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பழனி அருகே தோட்ட காவலாளியை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தோட்ட காவலாளி
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் கணேசன். அவருடைய மகன் மோகன்ராஜ் (வயது 35). இவர், திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பெத்தநாயக்கன்பட்டி பகுதியில் தனியார் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.
இவரது தோட்டத்தில், கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரை சேர்ந்த கலையரசன் மகன் கார்த்தி (24) காவலாளியாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மோகன்ராஜ், கார்த்தி ஆகியோர் தோட்டத்தில் உள்ள அறையில் தங்கியிருந்தனர்.
துப்பாக்கிச்சூடு
இந்தநிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் தோட்ட பகுதியில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. இதனையடுத்து கார்த்தி வெளியே சென்று பார்த்தார். அப்போது யாரோ மர்ம நபர்கள் துப்பாக்கியால் கார்த்தியை சுட்டுவிட்டு தப்பியோடினர்.
இதில், கார்த்தியின் இடது மார்பு பகுதியில் குண்டு பாய்ந்தது. படுகாயம் அடைந்த அவர் வலியால் அலறினார். அவரது சத்தம்கேட்டு மோகன்ராஜ் மற்றும் அக்கம்பக்கத்து தோட்டக்காரர்கள் அங்கு விரைந்து வந்தனர்.
காயம் அடைந்த கார்த்தியை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கு கார்த்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
இதற்கிடையே துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்த பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சிவசக்தி மற்றும் பழனி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் துப்பாக்கி சூடு நடந்த பகுதியை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மர்ம நபர்கள், துப்பாக்கியால் கார்த்தியை சுட்டுவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதேபோல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும் துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை பிடிக்க அவர் உத்தரவு பிறப்பித்தார்.
மோப்பநாய் சோதனை
திண்டுக்கல்லில் இருந்து மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அது, சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் தடயவியல் நிபுணர்களும் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.
பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் கார்த்தியை துப்பாக்கியால் சுட்டது யார்? என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
வேட்டைக்கும்பல் அட்டூழியம்
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கார்த்தி மீது பாய்ந்த குண்டு நாட்டு துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் வகையை சேர்ந்தது. பெத்தநாயக்கன்பட்டி, மானூர் பகுதியில் உள்ள தோட்டங்களில் தற்போது மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. இதனால் முயல், காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனை வேட்டையாடுவதற்காக வந்த கும்பல், கார்த்தியை துப்பாக்கியால் சுட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
பழனி பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடும் கும்பலின் அட்டூழியம் அதிகரித்துள்ளது. சமீபத்தில், பழனி வனப்பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய ஒருவரை வனத்துறையினர் கைது செய்து, அவருக்கு ரூ.50 ஆயிரம் அபாராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.