போலீசாருக்கு முதலுதவி பயிற்சி வகுப்பு; சூப்பிரண்டு தலைமையில் நடந்தது
தூத்துக்குடியில் போலீசாருக்கு முதலுதவி குறித்த பயிற்சி வகுப்பு, சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் நடந்தது.
தூத்துக்குடியில் போலீசாருக்கு முதலுதவி குறித்த பயிற்சி வகுப்பு, சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் நடந்தது.
பயிற்சி வகுப்பு
சாலை விபத்து மற்றும் மாரடைப்பு போன்ற ஆபத்தான சூழ்நிலைகளில் பொதுமக்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும் என்பது குறித்து காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
இதில் பொம்மை மனித உடல் மற்றும் மின் திரை மூலம் விபத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது? என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உதவி செய்வதன் முக்கியத்துவம் குறித்தும், எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும் என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
கயிற்றால் கட்டக்கூடாது
பயிற்சி வகுப்பில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தண்ணீர் உள்பட எதையும் முதலில் சாப்பிடுவதற்கோ, குடிப்பதற்கோ கொடுக்கக்கூடாது. காயமடைந்தவர்களுக்கு அடிப்பட்ட இடத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டால் காயத்தை சுத்தமான துணியால் கட்டி அதற்கு அழுத்தம் கொடுத்து கட்ட வேண்டும். ரத்தப்போக்கு ஏற்பட்ட இடத்தில் ரப்பர் அல்லது நைலான் கயிற்றால் கட்டக்கூடாது.
கை அல்லது கால் விரல்கள் துண்டிக்கப்பட்டால், அந்த துண்டிக்கப்பட்ட பாகத்தை சுத்தமான துணியால் மூடி, அதனை தண்ணீர் புகாமல் ஒரு பாலித்தீன் பையில் போட்டு கட்டி ஐஸ் கட்டிகளை வைத்து ஒரு பெட்டியில் அல்லது வேறு ஒரு பாலித்தீன் பையில் வைத்து அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். தலையில் காயம் ஏற்பட்டவர்களை அனாவசியமாக அசைக்க கூடாது. வாய் மற்றும் மூக்கு பகுதியில் ரத்தப்போக்கு ஏதேனும் இருந்தால் அடிபட்டவரை ஒருபக்கமாக சாய்த்தவாறு படுக்க வைக்க வேண்டும் என பல்வேறு அறிவுரைகளை எலும்பியல் மற்றும் விபத்து காய அறுவை சிகிச்சை மருத்துவர் வெங்கடேஷ்பாபு தலைமையிலான மருத்துவ குழுவினர் எடுத்துக்கூறினர்.
வெகுமதி அளிக்கப்படும்
பயிற்சி வகுப்பில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பேசுகையில், "முதலுதவி செய்தவர்களை காவல்துறையினர் ஊக்குவிக்கவேண்டுமே தவிர, அவர்களை சம்பந்தப்பட்ட வழக்கில் சாட்சியாக சேர்க்கக்கூடாது. ஆபத்தான சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு பொதுமக்கள் தைரியமாக உதவலாம். அவ்வாறு உதவி செய்யும் பொதுமக்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு குட் சமாரிட்டன் சட்டப்படி ரூ.5 ஆயிரம் வெகுமதி அளிக்கப்படும்" என்றார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ், இன்ஸ்பெக்டர்கள் ராஜாராம், மணிமாறன், ஜமால், அன்னராஜ், வனிதா, ராமலட்சுமி மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.
ஆய்வு
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேற்று தூத்துக்குடியில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சைக்கிளில் ரோந்து சென்றார். அப்போது ஜார்ஜ் ரோட்டில் சந்தேகப்படும்படியாக கையில் மண்வெட்டி கணையுடன் திரிந்தவரை பிடித்து விசாரணை நடத்தினார். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அனுப்பிவைத்தார். அவர் மீது ஏதேனும் வழக்குகள் உள்ளதா? என விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
பின்னர் அவர் திடீரென தென்பாகம் போலீஸ் நிலையத்திற்கு சென்று ஆவணங்களையும், காவல்துறையினர் மேற்கொள்ளும் பணிகளையும் பார்வையிட்டார். மேலும் போலீஸ் நிலையம் மற்றும் சுற்றுப்புறங்கள் தூய்மையாக வைக்கப்பட்டுள்ளதா? எனவும் பார்வையிட்டு அவர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கினார்.