கார்த்திகை மாதம் முதல் நாள்: அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்


கார்த்திகை மாதம் முதல் நாள்: அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்
x

கார்த்திகை மாதம் முதல் நாளையொட்டி கோவில்களில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

சேலம்

அய்யப்ப பக்தர்கள்

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல மாலை அணிவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை மாதம் முதல் நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் துளிசி மணி மாலைகள் அணிந்துக்கொண்டனர்.

அதன்படி சேலம் டவுன் பகுதியில் உள்ள ராஜகணபதி கோவிலுக்கு நேற்று அதிகாலையிலேயே திரளான பக்தர்கள் வந்தனர். பின்னர் அவர்கள் கோவிலில் சாமி கும்பிட்டனர். தொடர்ந்து கோவில் பூசாரிகள் அய்யப்ப பக்தர்களுக்கு மாலை அணிவித்தனர். இதையடுத்து பக்தர்கள் விரதத்தை தொடங்கினர். முன்னதாக ராஜகணபதி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

பூஜை பொருட்கள்

அதே போன்று மாநகர், மாவட்டங்களில் உள்ள பல்வேறு கோவில்களில் திரளான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு விரதம் தொடங்கினர். மாலை அணிவித்து கொண்ட அய்யப்ப பக்தர்கள் சிலர் கூறும் போது ஒரு வாரம் விரதம் இருந்து கோவிலுக்கு செல்வதாக கூறினர். சிலர் 15 நாட்களும் மற்றும் சிலர் ஒரு மாதம் விரதம் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவிக்க திரண்டதால் நேற்று கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் கோவில் வளாகத்தில் பூ, மாலை, உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனையும் அமோகமாக நடைபெற்றது.

ஆத்தூர்

ஆத்தூர் ஸ்ரீவெள்ளை பிள்ளையார் கோவில், முருகன் கோவில், கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவில் உள்பட ஆத்தூரில் உள்ள அனைத்து கோவில்களிலும் அதிகாலை முதலே பக்தர்கள் குளித்துவிட்டு கருப்பு, காவி வேட்டிகள் அணிந்து கொண்டு வந்தனர். பின்னர் சபரிமலைக்கு மாலை அணிந்து உண்ணாவிரதம் தொடங்கினர். வரிசையில் நின்று தங்களது குருசாமி உதவியுடன் மாலை அணிந்து, பயபக்தியுடன் சாமியே அய்யயப்பா, சாமியே அய்யப்பா என சரண கோஷத்துடன் கோவிலை வலம் வந்தனர். நரசிங்கபுரம், ஆத்தூர் பகுதிகளில் மட்டும் நேற்று 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர். இதனால் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.


Next Story