முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை பயணம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை பயணம்; சிவகங்கை, புதுக்கோட்டையில் நாளை நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
சென்னை,
சிவகங்கை, புதுக்கோட்டை பகுதிகளில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். இதற்காக அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு மேல் சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு சென்று, மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகத்தை அவர் பார்வையிடுகிறார்.
இன்று இரவு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தங்குகிறார்.
நாளை (புதன்கிழமை) மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக சிவகங்கைக்கு செல்கிறார். சிவகங்கையில் சமத்துவபுரத்தை திறந்து வைக்கிறார். பின்னர் அங்கு நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதோடு, ஏற்கனவே முடிக்கப்பட்ட திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டுகிறார்.
அதைத்தொடர்ந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டைக்கு வருகிறார். புதுக்கோட்டையிலும் அன்று மாலை சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 8 மணிக்கு திருச்சி செல்கிறார். பின்னர் திருச்சியில் இருந்து விமானம் மூலம் நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை வருகிறார்.