மக்களுக்கு பயன் அளிக்கும் புதிய யுக்திகளை நடைமுறைப்படுத்த வேண்டும் முதல்-அமைச்சர் வேண்டுகோள்
மக்களுக்கு பயன் அளிக்கும் புதிய யுக்திகள் எங்கிருந்தாலும் அதனை நம் மாநிலத்தில் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்று துறை செயலாளர்களுடனான ஆய்வு கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை,
சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்ட அரங்கில் துறை வாரியான ஆய்வுக்கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 2 நாட்கள் நடந்தது.
நேற்று முன்தினம் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வினியோகம், பொதுப்பணித்துறை உள்ளிட்ட 19 துறைகளின் செயல்பாடுகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
நேற்று ஆதிதிராவிடர் நலத்துறை, வேளாண், கால்நடை, பால்வளம், மீன் வளம், பிற்பட்டோர், இதர பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, பள்ளிக்கல்வி, உயர்கல்வி, தொழிலாளர் நலம், ஊரக மேம்பாடு, சுகாதாரம், சமூக நலம், முதல்வரின் முகவரி, மாற்றுத்திறனாளிகள் துறை, சுற்றுச்சூழல், சட்டம், இளைஞர்கள் நலம், திட்டம் மற்றும் நிதித்துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
விரைந்து செயல்படுத்த வேண்டும்
அப்போது, துறை வாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்களில் எந்த அளவுக்கு பணிகள் நடைபெற்றுள்ளது என்ற விவரத்தை துறை செயலாளர்களிடம் கேட்டறிந்தார்.
ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ள வேண்டிய பணிகளை விரைந்து செயல்படுத்தவும் அதிகாரிகளை மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் தலைமைச்செயலாளர் இறையன்பு உள்ளிட்ட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், துறைகளின் செயலாளர்கள் பங்கேற்றனர்.
குறிப்பிடத்தக்க வெற்றி
கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
கடந்த ஆண்டு புதிய அரசாக நாம் பொறுப்பேற்ற தருணத்தில், நமது மாநிலத்தையே முடக்கி போட்ட கொரோனா தொற்று, வரலாறு காணாத மழை வெள்ளம் மற்றும் மோசமான நிதி நிலைமை என ஒரே நேரத்தில் பல சவால்களை எதிர்கொண்டு, அதில் ஓரளவிற்கு குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றோம்.
மக்கள் நலன் கருதியும், மாநிலத்தை ஒரு புதிய வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் வகையிலும், பல்வேறு அறிவிப்புகளை நாம் கடந்த ஆண்டு அறிவித்திருக்கிறோம்.
அப்படி அறிவித்த அறிவிப்புகளில் சிறப்பான வகையில் சில திட்டங்கள் செயலாக்கத்திற்கு வந்திருக்கிறது. அதற்காக முதலில் உங்கள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும்
தொழில் துறையின் மூலம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு பல திட்டங்களை, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நாம் முன்னெடுத்திருக்கிறோம்.
அதனை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வந்து, படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்புகளை பெருக்க வேண்டும்.
புதிய தொழில்கள் தொடங்கப்படுவதை ஊக்குவிக்க வேண்டும். அதில் நடைமுறை சிக்கல்கள் இருந்தால், அதை நீக்குவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். குறிப்பாக, நில எடுப்பு மற்றும் அனுமதி வழங்கல் போன்றவற்றை துரிதப்படுத்த வேண்டும்.
மருத்துவ சேவை
மருத்துவ சேவையை எந்தவித சிரமும் இல்லாத வகையில் மக்கள் பெறும் வகையில் மருத்துவமனை நிர்வாகத்தினை மேம்படுத்த வேண்டும்.
கிராமப்புற மக்களை மையமாக கொண்டு செயல்படும் ஊரக வளர்ச்சித் துறையானது குடிநீர் வசதி, ஊரக வீட்டு வசதித் திட்டம், ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்துவதோடு, சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டுத் திட்டங்களை விரைந்து நிறைவேற்றுவதிலும் சிறப்பான கவனத்தை செலுத்த வேண்டும்.
வேளாண்மை துறையை பொறுத்தவரையில், உழவர் சந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும், புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவதிலும், புதிய பயிர் வகைகளை அறிமுகப்படுத்துவதிலும், வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய வேளாண் சந்தையை பலப்படுத்திடவும், உழவர் உற்பத்தியாளர் குழுக்களை பெருமளவில் அமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் மட்டுமே, விவசாயிகளின் வருமானத்தை நாம் அதிகரிக்க முடியும்.
புதிய யுக்திகள்
ஒவ்வொரு துறையினரும், தங்களது திட்டம் சென்றடைய வேண்டியது எந்த தரப்பு மக்களுக்கு என்பதை தெளிவாக உணர்ந்து, முறையாக கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
தமிழக மக்கள் இந்த அரசின் மீது வைத்துள்ள பெரும் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில், ஒவ்வொரு துறையும் செயலாற்ற வேண்டும்.
புதிய யுக்திகள் எங்கிருந்தாலும், அவை மக்களுக்கு பயன் அளிக்கும் என்றால், அதை நம் மாநிலத்தில் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும். அப்படி நீங்கள் செய்தால், உங்களை ஊக்குவிக்க இந்த அரசு தயாராக இருக்கிறது.
ஒவ்வொரு துறைத் தலைவரும், தங்கள் அமைச்சருடன் இணைந்து அறிவிப்புகள் அனைத்தையும், குறிப்பிட்ட காலத்திற்குள், குறிப்பிட்ட நிதி ஒதுக்கீட்டிற்குள் நிறைவேற்றிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.