'நிலச்சரிவுக்கான முதல் அறிகுறி'
கூடலூரில் வீடுகள், சாலைகளில் விரிசல் ஏற்பட்டது. இதை ஆய்வு செய்த விஞ்ஞானி, நிலச்சரிவுக்கான முதல் அறிகுறி என தெரிவித்தார்.
கூடலூர்,
கூடலூரில் வீடுகள், சாலைகளில் விரிசல் ஏற்பட்டது. இதை ஆய்வு செய்த விஞ்ஞானி, நிலச்சரிவுக்கான முதல் அறிகுறி என தெரிவித்தார்.
நிலங்களில் விரிசல்
கூடலூர் பகுதியில் தொடர் கனமழை பெய்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் தெய்வமலை என்ற பகுதியில் சாலையில் பல மீட்டர் தூரத்துக்கு விரிசல் ஏற்பட்டது. அப்பகுதியில் இருந்து தேயிலை தோட்டங்கள் வழியாக நடுகூடலூர், ராஜகோபாலபுரம் வரை நிலங்களில் விரிசல் ஏற்பட்டது தெரியவந்தது.
மேலும் நடு கூடலூர் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்தன. தொடர்ந்து வருவாய்த்துறையினர், போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமார், நகராட்சி மன்ற தலைவர் பரிமளா, பொறியாளர் பார்த்தசாரதி, சுகாதார ஆய்வாளர் சரவணன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
பின்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேதம் அடைந்த வீட்டிலிருந்து 4 முதியவர்கள், 15 பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். இதனிடையே இந்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு மேலாண்மை முதன்மை விஞ்ஞானி மணிவண்ணன், புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர்கள் லோகநாதன், சரவணன், மண்டல துணை தாசில்தார்கள் சாந்தி, வசந்த், கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித் நேற்று விரிசல் ஏற்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் ஆய்வு நடத்தினர். பின்னர் நடுக்கூடலூரில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டனர்.
நிலச்சரிவின் முதல் அறிகுறி
அப்போது இப்பகுதியில் அதிக தூண்கள் (பில்லர்கள்) வைத்து வீடுகள் கட்ட வேண்டும் என்று பொதுமக்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து முதன்மை விஞ்ஞானி மணிவண்ணன் கூறும்போது, கனமழை காரணமாக பூமியில் நீரோட்டம் அதிகரித்து உள்ளது. மண்ணுக்கு அடியில் பாறை இல்லாததால் விரிசல்கள் அதிகரித்து வீடுகள் சேதமடைந்தன. இது நிலச்சரிவுக்கான முதல் அறிகுறியாக கருதப்படுகிறது. புவியியல் துறையின் விஞ்ஞானிகள் அறிவியல் பூர்வமாக ஆய்வு நடத்த வேண்டும் என்றார்.