கூட்டுறவு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை
செம்பட்டி அருகே கூட்டுறவு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் முதன் முறையாக கூட்டுறவு துறை சார்பில் செம்பட்டி அருகே உள்ள சுதனாகியபுரத்தில் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி கலந்துகொண்டு புதிய மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் சுமார் ரூ.1,000 கோடி வரை ஊழல் நடைபெற்று உள்ளது. அதற்கான விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் முடிவில், கூட்டுறவு சங்க ஊழல்களில் ஈடுபட்டவர்களில் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும். புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த கல்லூரியில் தற்போது 5 பிரிவுகள் மட்டும் உள்ளது. தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட பிற பாட பிரிவுகளும் தொடங்கப்படும். திண்டுக்கல்லில் விரைவில் சட்டகல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி காத்திருப்பவர்களுக்கு விரைவில் பணி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாஸ்கரன், ஆத்தூர் தாசில்தார் சரவணன், ஆத்தூர் ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி முருகேசன், துணைத்தலைவர் ஹேமலதா மணிகண்டன், தி.மு.க. மாவட்ட துணைச்செயலாளர் தண்டபாணி, ஆத்தூர் ஒன்றிய செயலாளர்கள் (மேற்கு) ராமன் (கிழக்கு) முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், சீவல்சரகு ஊராட்சி மன்ற தலைவர் ராணி ராஜேந்திரன், ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தட்சிணாமூர்த்தி, ஏழுமலையான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.