தர்மபுரி பிடமனேரி ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு
தர்மபுரி:
தர்மபுரியை அடுத்த பிடமனேரி ஏரி 40 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியில் தண்ணீர் நிரம்புவதன் மூலம் தர்மபுரி நகராட்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயருகிறது. மேலும் விவசாய தண்ணீர் தேவையை இந்த ஏரி பூர்த்தி செய்து வருகிறது.
கடந்த 2 மாதமாக பெய்த தொடர் மழையால் இந்த ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இந்தநிலையில் பிடமனேரி ஏரியில் சுற்றுவட்டார குடியிருப்புகளில் இருந்து கழிவுநீர் அதிகமாக கலக்கிறது. இதனால் ஏரி தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏரியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.இதனிடையே நேற்று பிடமனேரி ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் திடீரென செத்து மிதந்தன. இதனால் துர்நாற்றம் வீசியது. மேலும் ஏரியில் விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கலெக்டர் சாந்தி ஏரியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மீன் வளத்துறை உதவி இயக்குனர் கோகுல ரமணன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
ஏரியில் அதிகப்படியான கழிவுநீர் கலந்துள்ளதால், மீன்களின் சுவாசத்திற்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கவில்லை. இதனால் மீன்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து செத்த மீன்களை அப்புறப்படுத்தும் பணி நடந்தது.