குளச்சலில் மீன்வரத்து குறைந்தது


குளச்சலில் மீன்வரத்து குறைந்தது
x

குளச்சலில் பலத்த காற்றால் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. இதனால், மீன்வரத்து குறைந்தது. போதிய வருமானம் இல்லாததால் மீனவர்கள் கவலை அடைந்தனர்.

கன்னியாகுமரி

குளச்சல்,

குளச்சலில் பலத்த காற்றால் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. இதனால், மீன்வரத்து குறைந்தது. போதிய வருமானம் இல்லாததால் மீனவர்கள் கவலை அடைந்தனர்.

மீன்பிடி துறைமுகம்

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடலுக்கு சென்று 10 நாட்கள் வரை தங்கியிருந்து மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். அவற்றில் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய், கிளி மீன்கள் போன்ற உயர் ரக மீன்கள் இருக்கும்.

பைபர் வள்ளங்கள் காலையில் கடலுக்கு சென்று விட்டு மதியம் கரை திரும்பும். இவற்றில் நெத்திலி, சாளை போன்ற சிறிய ரக மீன்கள் இருக்கும்.

போதிய மீன்கள் கிடைக்கவில்லை

இந்தநிலையில் கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள், வள்ளங்களில் போதிய மீன்கள் கிடைக்கவில்லை. இதற்கிடையே குளச்சல் கடலில் கடந்த வாரம் பலத்த காற்று வீசியதால் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும், மீன்பிடிக்க சென்ற பைபர் வள்ளம், கட்டுமரங்களிலும் போதிய மீன்கள் கிடைக்கவில்லை.

இதனால் குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைந்தது. குளச்சலுக்கு வந்திருந்த வியாபாரிகள் ஏமாற்றமடைந்து திரும்பி சென்றனர்.

இதுகுறித்து மீனவர் ஒருவர் கூறியதாவது:-

போதிய வருமானம் இல்லை

இந்த சீசனில் ஆழ்கடல் பகுதிக்கு செல்லும் விசைப்படகுகளில் 'கேரை' மீன்கள் பிடிபடும். ஆனால் தற்போது கேரை மீன்கள் கிடைக்க வில்லை. ஓரளவு கிளி மீன்களே கிடைக்கிறது. அவையும் குறைவான அளவு கிடைப்பதால் விசைப்படகின் டீசல் செலவுக்கு கூட போதுமானதாக இல்லை. கடல் நீரோட்டம் காரணமாக வள்ளங்களிலும் மீன்கள் பிடிபடவில்லை. இதனால் பெரும்பான்மையான வள்ளங்களும் கடலுக்கு செல்ல ஆர்வம் காட்டவில்லை. மீன் வரத்து குறைந்ததால் போதிய வருமானம் இல்லாமல் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கவலையுடன் கூறினார்.

ேநற்று குளச்சலில் சில வள்ளங்களில் குறைந்த அளவு கிளாத்தி மீன்கள் கிடைத்திருந்தன. அவற்றை மீனவர்கள் ஏலக்கூடத்தில் வைத்து விற்பனை செய்தனர். 20 கிளாத்தி மீன்கள் ேநற்று ரூ.540-க்கு விலை போனது. இதுபிற நாட்களில் ரூ.200 முதல் ரூ.250 வரைதான் விலை போகும் என்பது குறிப்பிட்டத்தக்கது.

குளச்சல் பகுதியில் கடந்த 10 நாட்களாக மீன் வரத்து குறைந்து உள்ளதால் வியாபாரிகள், மீன் பிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அத்துடன் மீன் விலையும் உயர்ந்துள்ளது.


Next Story