ரூ.56.95 கோடி செலவில் மீன் இறங்கு தளங்கள், மீன் விதைப் பண்ணை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்..!
ரூ.56.95 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்கு தளங்கள், மீன் விதைப் பண்ணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 56 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 புதிய மீன் இறங்கு தளங்கள், 2 மேம்படுத்தப்பட்ட மீன் இறங்கு தளங்கள் மற்றும் மீன் விதைப் பண்ணை ஆகியவற்றை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29.09.2023) திறந்து வைத்தார்.
மேலும், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் நாகப்பட்டினம் மீன்வள பொறியியல் கல்லூரியில் 14 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவர் மற்றும் மாணவியர் விடுதிக் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், குறும்பனையில் 30 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்கு தளம், தஞ்சாவூர் மாவட்டம், கீழத்தோட்டம் கிராமத்தில் 8 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய மீன் இறங்கு தளம் மற்றும் சேதுபவாசத்திரம் மீனவ கிராமத்தில் 10 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்கு தளம், கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூரில் 4 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மரபணு ரீதியாக மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன் விதைப் பண்ணை, புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் கிராமத்தில் 3 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவிலும், புதுக்குடி கிராமத்தில் 1 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவிலும் அமைக்கப்பட்டுள்ள புதிய மீன் இறங்கு தளங்கள், என மொத்தம் 56 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்கு தளங்கள் மற்றும் மீன் விதைப் பண்ணை ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நாகப்பட்டினம், மீன்வளப் பொறியியல் கல்லூரியில் தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கியின் நிதி உதவியுடன் 7 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 33 தங்கும் அறைகளுடன் சுமார் 110 மாணவர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதிக் கட்டடம் மற்றும் 7 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 33 தங்கும் அறைகளுடன் சுமார் 110 மாணவிகள் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதிக் கட்டடம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இவ்விடுதிகளில், பொழுதுபோக்கு அறை, ஓய்வறை, உடற்பயிற்சிகூடம், வாசகர் அறை, உணவுக்கூடம், விடுதி பாதுகாவலர் அறை மற்றும் நவீன கழிப்பறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.