நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் குவிந்த மீன் பிரியர்கள்
நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் குவிந்த மீன் பிரியர்கள்
நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிரியர்கள் மீன் வாங்க குவிந்தனர். விற்பனை மந்தமாக இருந்ததால் மீனவர்கள் கவலை அடைந்தனர்.
மீன்வாங்க திரண்ட மீன்பிரியர்கள்
நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர், விழுந்தமாவடி, காமேஸ்வரம் புஷ்பவனம், கோடியக்கரை உள்ளிட்ட 27 மீனவ கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். நாகை துறைமுகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான விசை படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுவிட்டு நேற்று அதிகாலை 3 மணி முதல் கரை திரும்பினர். அப்போது மீன்களை வாங்குவதற்காக மீன்பிரியர்கள், மீன் வியாபாரிகள் அதிகாலையிலேயே நாகை துறைமுகத்தில் திரண்டனர்.
மீன்விற்பனை மந்தம்
ஆவணி மாதங்களில் கோவில் திருவிழாக்கள் அதிகமாக இருப்பதாலும், ஆவணி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு உகந்தது என்பதாலும், இதனால் ஏராளமான பெண்கள் விரதமும் இருப்பதாலும் மீன்விற்பனை மந்தமாக காணப்பட்டது. இதனால் மீனவர்கள் கவலையில் உள்ளனர்.
நேற்று வஞ்சரம் கிலோ ரூ. 550 முதல் ரூ.600 வரையும், வௌவால் கிலோ ரூ. ஆயிரம் முதல் ஆயிரத்து 50 வரையும், பாறை கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரையும், சீலா கிலோ ரூ.300 முதல் ரூ.350 வரையும், விலைமீன் கிலோ ரூ.250முதல் ரூ.300 வரையும், சங்கரா கிலோ ரூ.200 முதல் ரூ.250வரையும், நெத்திலி கிலோ ரூ.100 முதல் ரூ.120-க்கு விற்பனையானது.
மீனவர்கள் கவலை
கடந்த வாரத்தை ஒப்பிடும்போது இந்த வாரம் விலை சற்று குறைந்து காணப்பட்டதால் மீன்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது வேளாங்கண்ணி ஆண்டு திருவிழா நடைபெற்று வருவதால் அங்கு வந்துள்ள பக்தர்களும், மீன்வாங்க அக்கரைப்பேட்டையில் உள்ள மீன் பிடி துறைமுகத்திற்கு வந்துள்ளதால் மீன்பிடி துறைமுகம் மக்கள் கூட்டத்தால் களை கட்டியது. வழக்கமாக 6.30 மணிக்கு ஞாயிற்றுக்கிழமை ஏலம் முடியும் நிலையில் நேற்று 9 மணி வரை நீடித்தது என மீனவர்கள் தெரிவித்தனர். ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும்போது மீனவர்கள் ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவு செய்து கடலுக்கு மீன் பிடிக்க செல்வதாகவும், ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு மீன்கள் விற்பனை இல்லை எனவும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.