கோடியக்கரையில் 6 மாத கால மீன்பிடி சீசன் முடிவுக்கு வந்தது


கோடியக்கரையில் 6 மாத கால மீன்பிடி சீசன் முடிவுக்கு வந்தது
x
தினத்தந்தி 2 April 2023 1:00 AM IST (Updated: 2 April 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் அருகே காற்றின் திசை மாறுவதால் கடல் சீற்றமாக காணப்படுகிறது. கோடியக்கரையில் 6 மாத கால மீன்பிடி சீசன் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் மீனவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகிறார்கள்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம் அருகே காற்றின் திசை மாறுவதால் கடல் சீற்றமாக காணப்படுகிறது. கோடியக்கரையில் 6 மாத கால மீன்பிடி சீசன் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் மீனவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகிறார்கள்.

மீன்பிடி தொழில்

வங்கக்கடலோரம் அமைந்துள்ள எழில்மிகு மாவட்டமாக நாகை திகழ்கிறது. காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியில் அமைந்துள்ள நாகை மாவட்டத்தில் விவசாயத்துடன், மீன்பிடி தொழிலும் பிரதானமாக உள்ளது.

நாகை மாவட்டம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் எனும் பெரிய வகை படகுகள் மூலமாகவும், 2,500-க்கும் மேற்பட்ட பைபர் படகு எனும் சிறிய வகை படகுகள் மூலமாகவும் மீனவர்கள் மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வருகிறார்கள்.

கடலிலேய தங்கி...

நாகை அருகே உள்ள நாகூர் பட்டினச்சேரி முதல் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை வரை 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. விசைப்படகுகளில் ஆழ்கடலுக்கு செல்லும் மீனவர்கள் 5 நாள் முதல் 7 நாள் வரை கடலிலேயே தங்கி இருந்து மீன்பிடித்துவிட்டு கரை திரும்புவார்கள்.

பைபர் படகில் செல்லும் மீனவர்கள் உடனடியாக கரை திரும்பி விடுவார்கள்.

ரூ.5 கோடி வரை வர்த்தகம்

நாகை மாவட்டத்தில் இருந்து வெளிநாடுகளுக்கும் மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மீன்பிடி சீசன் காலத்தில் ஒரு நாளைக்கு ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடி வரை மீன் வர்த்தகம் நடக்கிறது.

வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடி சீசன் காலமாகும். பல்வேறு ஊர்களில் இருந்து மீனவர்கள் கோடியக்கரைக்கு வந்து தங்கி மீன்பிடிப்பார்கள். சீசன் காலத்தில் ஆயிரக்கணக்கானோர் இங்கு தங்கி மீன்பிடிப்பது வழக்கம்.

டன் கணக்கில்...

அதன்படி இந்த ஆண்டும் பல்வேறு ஊர்களை சேர்ந்த மீனவர்கள் கோடியக்கரையில் தங்கி மீன்பிடித்தனர். நாள்தோறும் மீனவர்கள் காலா, ஷீலா, வாவல் என 50-க்கும் மேற்பட்ட மீன் வகைகளும், 5-க்கும் மேற்பட்ட இறால் வகைகளும், 10-க்கும் மேற்பட்ட நண்டு வகைகளும் டன் கணக்கில் பிடித்து வந்தனர்.

ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மீன்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வந்தன.

கடல் சீற்றம்

இந்த நிலையில் தற்போது வடக்கு திசை காற்று தெற்கு திசை காற்றாக திசை மாறி வீசி வருகிறது. வேதாரண்யம் பகுதியில் காற்றின் வேகத்தால் கடல் அலைகள் அடுக்கடுக்காக எழும்பி கடல் கடும் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

காற்றின் திசை மாறியதால் மீன்பிடி சீசன் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து கோடியக்கரைக்கு வந்து தங்கி மீன்பிடித்து வந்த மீனவர்கள் படகுகள் மற்றும் மீன்பிடி பொருட்களுடன் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகிறார்கள். 6 மாத கால மீன்பிடி சீசன் நிறைவடைந்த நிலையில் எப்போதும் பரபரப்பாக காணப்பட்ட கோடியக்கரை கடற்கரை நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.


Next Story