மீன்பிடி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
மீன்பிடி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலைசெய்தார்.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே உள்ள ஞாறான்விளையில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் வசித்து வந்தவர் பிரேம்ராஜ் (வயது 58). இவர் இரையுமன்துறை பகுதியில் மீன்பிடி தொழில் செய்து வந்தார். பிரேம்ராஜ் ஏற்கனவே இலங்கையில் வசித்து வந்தபோது அங்கு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். பின்னர் இந்தியாவுக்கு வந்தபின் ஞாறான்விளை அகதிகள் முகாமில் வசித்தபோது வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதில் அவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரேம்ராஜின் மனைவி குழந்தையுடன் அவரை விட்டு பிரிந்து கங்கை கொண்டானில் உள்ள அகதிகள் முகாமுக்கு சென்று விட்டார். அதன்பிறகு ஞாறான்விளை அகதிகள் முகாமில் பிரேம்ராஜ் தனியாக வசித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலையில் பிரேம்ராஜ் தான் தங்கி இருந்த வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிரேம்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.