தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் தொடரும் சம்பவம்:படகு கவிழ்ந்து மீனவர் பலி;முகத்துவாரத்தை சீரமைக்கக்கோரி மீனவர்கள் சாலை மறியல்


தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் தொடரும் சம்பவம்:படகு கவிழ்ந்து மீனவர் பலி;முகத்துவாரத்தை சீரமைக்கக்கோரி மீனவர்கள் சாலை மறியல்
x

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் படகு கவிழ்ந்து மீனவர் பலியானார். முகத்துவாரத்தை சீரமைக்கக்கோரி மீனவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

கொல்லங்கோடு,

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் படகு கவிழ்ந்து மீனவர் பலியானார். முகத்துவாரத்தை சீரமைக்கக்கோரி மீனவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மீன்பிடி துறைமுகம்

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் சரியான திட்டமிடல் இல்லாமல் அமைக்கப்பட்டதால் அடிக்கடி அந்த பகுதியில் படகு கவிழ்ந்து உயிரிழப்பு சம்பவம் நடந்து வருவதாக மீனவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதற்கேற்றாற்போல் கடந்த 3 வருடங்களில் மீன்பிடி துறைமுக முகத்துவார பகுதியில் 5-க்கும் மேற்பட்ட மீனவர்கள் படகு கவிழ்ந்து பலியாகி உள்ளனர். இதற்கிடையே மீனவர்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக கடந்த ஆட்சி காலத்தின் இறுதியில் துறைமுகத்தை மறுசீரமைப்பு செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனாலும் இதுவரை பணிகள் நடைபெறாமல் உள்ளது.

படகு கவிழ்ந்து மீனவர் சாவு

இந்தநிலையில் நேற்று காலையில் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து மீனவர் பலியான சம்பவம் நடந்துள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு:-

பூத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சைமன் (வயது 46). இவர் நேற்று 4 பேருடன் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வள்ளத்தில் மீன்பிடிக்க சென்றார். கடலில் மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய போது முகத்துவாரத்தை நெருங்கிய போது திடீரென படகு கவிழ்ந்தது. இதில் மீனவரான சைமன் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். மற்ற மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மீனவ மக்கள் சாலை மறியல்

பின்னர் இறந்த மீனவரின் உடலை சக மீனவர்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் மீனவ கிராமத்தினர் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

மேலும் பூத்துறை சந்திப்பு பகுதியில் மீனவ மக்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த அரசு பஸ்களையும் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இணைப்பு சாலைகளிலும் கயிறுகள் கட்டி தடுப்புகள் அமைத்தனர். இதனால் அங்கு பதற்றம் உருவானது.

இறந்த மீனவரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும், சீரமைக்கப்படாமல் இருக்கும் துறைமுக முகத்துவாரத்தை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.

இந்த பதற்றத்தால் குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். பின்னர் வருவாய்த்துறையினர், மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மீனவர்கள் போராட்டத்தை தொடர்வதில் உறுதியாக இருந்தனர். கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

இதற்கிடையே ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. போராட்ட களத்திற்கு வந்தார்.பின்னர் அவர் மீனவர்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். அந்த சமயத்தில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துறைமுக மறுசீரமைப்பு பணியை நாளை முதல் தொடங்க உள்ளதாக கூறியதாக மீன்வளத்துறையை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

துறைமுகத்தை மூடியதால் பரபரப்பு

ஆனால் நேரில் வந்து உத்தரவாதம் அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்ததோடு போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.

போராட்டத்தில் பங்கேற்ற மீனவர்களில் சிலர் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திற்கு சென்று துறைமுகத்தின் இருபுறங்களிலும் குறுக்காக கயிறு கட்டி துறைமுகத்தை மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story