தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச் சூடு: பிரதமருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் காயமடைந்தது தொடர்பாக பிரதமருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசரமாக கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் காயமடைந்தது தொடர்பாக பிரதமருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசரமாக கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர், காரைக்காலைச் சேர்ந்த 3 பேர் என10 மீனவர்கள் தங்களது விசைப்படகில் நடுக்கடலில் 21-ந் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஐ.என்.எஸ். பங்காரம் என்ற கப்பலில் பாதுகாப்புப் பணியிலிருந்த இந்தியக் கடற்படையினர், இம்மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
இதில் வீரவேல் என்ற மீனவரின் வயிறு மற்றும் தொடையில் குண்டு பாய்ந்து ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். அவர் பலத்த காயங்களுடன் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வருகிறார்.இச்சம்பவத்தில் இந்தியக் கடற்படையினரின் செயல் மிகுந்த வருத்தத்திற்குரியது. இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அவ்வப்போது தாக்கப்படுவதால் ஏற்படும் துயரத்தை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
இந்தியக் கடற்படையினரே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போது அது அடித்தட்டில் வாழும் மீனவர்களிடையே நம்பிக்கையின்மையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்துவதாக அமைகிறது.எனவே நீங்கள் இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, இந்திய கடற்பகுதியில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை, இந்திய பாதுகாப்பு முகமையினர் மிகுந்த எச்சரிக்கையுடனும், நிதானத்துடனும் கையாள்வதற்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.