தூண்டில் வளைவை நீட்டித்து தரக்கோரி மீனவர்கள் போராட்டம்
கன்னியாகுமரியில் தூண்டில் வளைவை நீட்டித்து தரக்கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரியில் தூண்டில் வளைவை நீட்டித்து தரக்கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூண்டில் வளைவு
கன்னியாகுமரி வடக்கு தெரு, பெரியநாயகி தெரு போன்ற கடற்கரை பகுதியில் இருந்து தினமும் 400-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடல் அலையின் சீற்றம் காரணமாக நாட்டு படகுகள் கவிழ்ந்து அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் உயிர் இழப்புகளும் ஏற்படுகிறது. இதனால் பெரிய நாயகி தெரு கடற்கரை பகுதியில் தூண்டில் வளைவை நீட்டித்து தர வேண்டும் என மீனவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
பின்னர் நீண்ட போராட்டத்தை தொடர்ந்து அங்கு 2017-ம் ஆண்டு 300 மீட்டர் அளவிலான தூண்டில் பாலம் அமைக்க அரசு தீர்மானித்து அதற்கான நிதியை ஒதுக்கியது. ஆனால் அந்த நிதி போதுமானதாக இல்லை என கூறி 221 மீட்டர் நீளம் கொண்ட தூண்டில் வளைவு அமைக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். பின்னர் இந்த பணியும் கிடப்பில் போடப்பட்டதின் காரணமாக கன்னியாகுமரி பங்கு பேரவை சார்பில் மீண்டும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தற்போதைய தி.மு.க. ஆட்சி காலத்தில் ரூ.6 கோடியே 80 லட்சத்தில் புதிய தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மீனவர்கள் போராட்டம்
இந்தநிலையில் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பருவநிலை மாற்றம் காரணமாக அந்த பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்து வருவதால் தற்போது நடைபெற்று வரும் தூண்டில் வளைவு பாலப்பணியினை மேலும் 311 மீட்டர் நீளத்திற்கு விரிவு படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று கன்னியாகுமரி பகுதி நாட்டு படகு மீனவர்கள் ஒரு நாள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
மேலும் அங்கு நடைபெற்று வந்த பணியை தடுத்து நிறுத்தி கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையிலான போலீசார் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பரபரப்பு
அப்போது தமிழக அரசு உடனடியாக தங்களது கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும் எனவும் மறுக்கப்படும் பட்சத்தில் பெரிய அளவிலான போராட்டங்களை நடத்தப் போவதாகவும் மீனவர்கள் தெரிவித்தபடி கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தில் கன்னியாகுமரி பங்குத்தந்தை உபால்ட் மரியதாசன், கன்னியாகுமரி ஊர் தலைவர் ஜோசப், செயலாளர் சேசு சுமன், பொருளாளர் தீபக், கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் உள்பட 200-க்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர். கன்னியாகுமரியில் மீனவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.