மீன்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்
ராமேசுவரத்தில் மீன்துறை அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் சமீபத்தில் மீன் துறை அதிகாரிகள் அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை வைத்து மீன் பிடிப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து பல படகுகளை சோதனை செய்தனர். அப்போது சோதனை செய்ததில் 50 படகுகள் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்ததாக மீன்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து அந்த படகுகள் மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டையும் நிறுத்தி வைத்திருந்தனர்.
இந்த நிலையில் ராமேசுவரம் மீன் துறை டோக்கன் அலுவலகம் முன்பு நேற்று ஏராளமான மீனவர்கள் 50 படகுகள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யவும் அனைத்து படகுகளுக்கும் மீன்பிடி அனுமதிச்சீட்டு வழங்க வலியுறுத்தியும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் நடத்திய மீனவர்களிடம் மீன்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க யாரும் செல்ல வேண்டாம் எனவும் தடை செய்யப்பட்ட வலைகளை வைத்து வழக்குபதிவு செய்யப்பட்ட படகுகள் மீதான நடவடிக்கையை ரத்து செய்வது குறித்து உயர் அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும். அதனால் அனைவரும் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். இதை தொடர்ந்து மீனவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தை கண்டித்து ராமேசுவரத்தில் நேற்று 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. அதே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அனுமதி பெற்று மீன் பிடிக்க கடலுக்கு சென்றன என்பது குறிப்பிடத்தக்கது.