மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட வந்த மீனவர்கள்


மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட வந்த மீனவர்கள்
x
தினத்தந்தி 15 Nov 2022 12:15 AM IST (Updated: 15 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் துறைமுகத்தில் மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றைகையிட வந்த மீனவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்திய சம்பவம்பரப்பை ஏற்படுத்தியுள்ளது

கடலூர்

கடலூர் முதுநகர்

சேமிப்பு திட்டம்

கடலூர் துறைமுகம் அருகே உள்ள சித்திரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த சுமார் 400 பேர், மீனவர் கூட்டுறவு சிறுசேமிப்பு திட்டத்தில், ஆண்டுதோறும் ரூ.1,500 பணம் செலுத்துவர். தீபாவளி பண்டிகையின் போது இந்த 1,500 ரூபாய் பணத்துடன் சேர்த்து, மாநில அரசின் நிதியாக ரூ.1500 மற்றும் மத்திய அரசின் நிதியாக ரூ.1500 சேர்த்து ரூ.4,500 மீனவர்களுக்கு வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான பணம் சித்திரைப்பேட்டை மீனவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இது பற்றி மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மீனவர்கள் கேட்டனர். இதற்கு இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் செலுத்த வேண்டிய தொகையை கூட்டுறவு சொசைட்டி தலைவர் மீன் வளத்துறை அலுவலகத்தில் செலுத்தாததால், தீபாவளிக்கு முன்பு வங்கிக் கணக்கில் வரவு வைக்க இயலவில்லை என்று கூறினர். இதையடுத்து மீனவர்கள் அனைவரும் சேர்ந்து கடந்த அக்டோபர் மாதம் மீதித் தொகையை செலுத்தியுள்ளனர். இருப்பினும் அவர்களுக்கு பணம் வரவு வைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

முற்றுகையிட முயற்சி

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த 80 பேருக்கு மட்டும் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த சித்திரைபேட்டை மீனவர்கள் கடலூர் மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட சென்று கொண்டிருந்தனர். இதை அறிந்த கடலூர் துறைமுகம் போலீசார் அவர்களை வழியிலேயே தடுத்து நிறுத்தி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், கூட்டுறவு சொசைட்டியின் தலைவர் பணத்தை தாமதமாக கட்டியதால் தான் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இல்லையென்றால் பணம் முன்பே வரவு வைக்கப்பட்டிருக்கும். தற்போது இது குறித்து எழுத்துப்பூர்வமாக சென்னை தலைமை அலுவலகத்துக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டது. இன்னும் 1 வாரத்திற்குள் சித்திரை பேட்டை மீனவ கிராம மக்களின் வங்கிக் கணக்கில் உரிய தொகை வரவு வைக்கப்படும் என்று கூறினர். இதை அடுத்து மீனவர்கள் திரும்பி சென்றனர். இதனால் கடலூர் துறைமுக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story