மீன்பிடி உபகரணங்கள் மானியத்தில் பெற மீனவர்கள் விண்ணப்பிக்கலாம்
திருவாரூர் மாவட்டத்தில் மீன்பிடி உபகரணங்கள் மானியத்தில் பெற மீனவர்கள் வருகிற 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் மீன்பிடி உபகரணங்கள் மானியத்தில் பெற மீனவர்கள் வருகிற 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
50 சதவீதம் மானியம்
தமிழ்நாட்டில் உள்நாட்டு மீனவர்களின் மீன்பிடிப்பு திறனை மேம்படுத்தவும், அவர்களின் வருவாயினை பெருக்கிடவும். உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க மீனவர்கள் மற்றும் மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராக உள்ள மீனவர்களுக்கு, 50 சதவீதம் மானியத்தில் மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்படும் என நடப்பு ஆண்டு சட்டசபை கூட்டத்தொடரில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 20 கிலோ நைலான் வலையினை ரூ.20 ஆயிரம் மதிப்பில் கொள்முதல் செய்யப்படும் தொகையில் 50 சதவீதம், அதாவது ரூ.10 ஆயிரம் பின்னிலை மானியமாக மீனவர்களுக்கு வழங்கப்படும். இதே போன்று ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மீன்பிடி பரிசல்களுக்கு 50 சதவீதம், அதாவது ரூ.10 ஆயிரம் பின்னிலை மானியமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கலாம்
உள்நாட்டு மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில் திருவாரூர் மாவட்டத்திற்கு மீன்பிடி வலைகள் 50 சதவீதம் மானியத்தில் வழங்க 3 எண்ணம் இலக்கு நிர்ணயம் செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி திட்டத்தில், பயன் பெற விருப்பம் உள்ளவர்கள் திருவாரூர் மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் இயங்கும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொண்டு உரிய விண்ணப்ப படிவம் பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பங்கள் உள்நாட்டு மீனவர்களிடம் இருந்து அதிகம் பெறப்படின், முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ள மீனவர்கள் வருகிற 15-ந் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.